Spread the love

மாநாடு 18 October 2022

கல்வியையும் ,மருத்துவத்தையும் இலவசமாக சமமானதாக, தரமானதாக, அனைவருக்கும் கொடுக்க வேண்டியது அரசின் கடமை அதை பெற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் உரிமை , பொதுமக்களிடத்தில் வாக்குகளை வாங்க வாக்குச்சாவடிகளை எவ்வளவு அருகில் வைக்கிறார்களோ அவ்வளவு தொலைவில் தான் மருத்துவமனைகளும், இருக்க வேண்டும்.

தோராயமாக 5 கிலோ மீட்டருக்கு ஒரு சுகாதார மையம் அமைத்திருக்க வேண்டும், அந்த மருத்துவமனைகளில், சர்க்கரை நோய், காய்ச்சல் ,ரத்த அழுத்தம், விஷக்கடி முதலுதவி, போன்றவற்றிற்கான மருந்து, மாத்திரைகளும், சிகிச்சை அளிக்க தரமான மருத்துவர்களும், செவிலியர்களும் அமைத்திருக்க வேண்டும் , இதையெல்லாம் செய்ய தவறி தந்தைக்கு பேனா சிலை வைப்பதிலும், தங்கைக்கு துணை பொது செயலாளர் கொடுப்பதிலும், தனது ஆர்வத்தையும், ஆற்றலையும், தற்போதைய தமிழக அரசின் முதல்வரும், இதே போல செயலை முன்பு தமிழகத்தை ஆண்ட அரசும் செய்து கொண்டு இருந்த காரணத்தால் இன்று அப்பாவி பெண்ணின் உயிர் தஞ்சாவூரில் போயிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியில் மளிகை கடை நடத்தி வருபவர் கமலநாதன் இவரின் மனைவி 59 வயதுடைய ஜெயலட்சுமி, இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதன் காரணமாக ஏழை, எளிய சர்க்கரை நோயாளிகள் எல்லாரையும் போல மாதம், மாதம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மாத்திரைகள் வாங்குவதற்காக, தனது கணவரோடு இருசக்கர வாகனத்தில், தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை வந்திருக்கிறார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகில் இருக்கும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் வாகனத்தின் பின்னால் வந்த பொன்னையா ராமஜெயம் கல்லூரி பேருந்து மோதியதில் வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்து இருக்கிறார், அந்த தனியார் கல்லூரி பேருந்து ஜெயலட்சுமியின் தலையில் ஏறி, இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தன் கணவர் கண் முன்னே தனது இன்னுயிரை விட்டிருக்கிறார், இதனைக் கண்ட கணவர் துடிதுடித்த

காட்சி மனிதராக வாழும் மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரையும் கலங்க வைத்தது, தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவலர்கள், உடலை மீட்டு உடற்குறாய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பல விபத்துக்கள் இந்த மேம்பாலத்தில் நடைபெற்று இருக்கிறது, மிகவும் குறுகிய மேம்பாலம் இது என்பதும் இந்த மேம்பாலத்தில் தான் பல நாட்கள் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியாமல் இருந்தது என்பதும் அதை சுட்டிக்காட்டி நமது மாநாடு இதழில் செய்தி வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நமது இதழில் செய்தி வெளியிடுவது யாரையும் குற்றம் சாட்டுவதற்காக அல்ல, குறைகளைத் திருத்தி நிவர்த்தி செய்வதற்காக தான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும்.

தவறும் பட்சத்தில் மாநாடு இதழ் எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு குற்றவாளிகளை சமூகத்தின் முன் அடையாளப்படுத்தும். விரைவில் இந்த மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்துக் கொண்டு செல்லவும், சாலை விதிகளை மதித்து செல்லவும் அறிவுறுத்தல் பதாகைகள் வைக்க வேண்டும். மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும்.

இந்த மேம்பாலம் இருளில் இருந்த செய்தி லிங்க் இதோ: https://maanaadu.in/breaking-70/

54110cookie-checkதஞ்சாவூரில் கணவர் கண்முன்னே தலை நசுங்கி மனைவி மரணம் பரபரப்பு தகவல்கள்
One thought on “தஞ்சாவூரில் கணவர் கண்முன்னே தலை நசுங்கி மனைவி மரணம் பரபரப்பு தகவல்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!