மாநாடு 04 November 2022
எந்த ஒரு பொருளையும் விற்கும் போது விற்பனை செய்யும் கடைக்காரர்களும், நிறுவனத்தினரும், நுகர்வோரின் நிலையில் இருந்து சிந்தித்துப் பேசி விற்பனை செய்தால் அவர்களின் நாணயத்தோடு ,நாணயமும் சேரும், நற்பெயரும் கிடைக்கும் ,ஆனால் சமீப காலமாக விற்பவர்களும் எப்படியாவது நாம் விற்றால் போதும் என்கிற நோக்கில் விற்கிறார்கள், வாங்குபவர்களும் பொருளின் தரத்தை பார்த்து வல்லுனர்களிடம் நன்கு விசாரித்து வாங்காமல் ஏதாவது ஒரு பொருளை வாங்கி விடுகிறார்கள், அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அல்லல்பட்டு தங்களது பொருளையும் இழந்து, பணத்தையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் ,
பொருள் வாங்க வரும் நுகர்வோர்க்கு அந்த பொருளின் தரம் பற்றி தெரிய வாய்ப்பில்லை என்கிற போது விற்பவர்கள் அந்த பொருளின் உண்மையான தரத்தை எடுத்துச் சொல்லி விற்பனை செய்ய வேண்டும், சில நேரங்களில் நல்ல நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் கூட ஏதாவது குறைபாடு ஏற்பட்டு பழுதடைய வாய்ப்புள்ளது அந்த நேரத்தில் பொருளை வாங்கிய நுகர்வோர்கள் வாங்கிய இடத்திற்கு வந்து கேட்கும்போது அந்த குறைகளை சரி செய்வதற்கு முறையாக எங்கு எப்படி சொல்லி அனுப்ப வேண்டுமோ அப்படி பேசி அனுப்பி குறைகளை சரி செய்ய வேண்டியது பொருளை விற்றவர்களின் கடமை அதனைத் தவறும் போது விவரமான சில வாடிக்கையாளர்கள் இப்போதெல்லாம் நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் முறையிட்டு தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்துக்கொண்டு இழப்பீடும் பெறுகிறார்கள் .
இதே போல ஒரு நிகழ்வு தஞ்சாவூரில் நடைபெற்று இருக்கிறது ,தஞ்சாவூர் பூர்விகா மொபைல்ஸ் என்கிற கடையில் பொருளை வாங்கியவரிடம் சரியான விளக்கம் அளிக்காமல் அலைக்கழித்திருக்கிறது தஞ்சாவூர் தெற்கு வீதியில் உள்ள பூர்விகா மொபைல்ஸ் என்கிற நிறுவனம் வாடிக்கையாளர் வழக்கு தொடுத்ததன் காரணமாக நீதிமன்றம் பூர்விகா மொபைல் தண்டம் விதித்து இருக்கிறது அதன் விவரம் பின்வருமாறு : தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ் பெற்ற நிறுவனமான பூர்விகா மொபைல் சென்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது அந்த நிறுவனத்தில் 6-4-2021 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ32 என்கிற மொபைல் போனை 21, 999 ரூபாய் கொடுத்து திருமதி ரம்யா என்கிற வாடிக்கையாளர் வாங்கி இருக்கிறார். இந்த மொபைல் போன் வாங்கியதில் இருந்து 5வது மாதத்திலேயே அதாவது 26-9-2021 முதலே தொடர்ந்து ஹேங் ஆவது போன்ற பிரச்சனைகளை கொடுத்து வந்திருக்கிறது, அதனையொட்டி மொபைல் போனை வாங்கிய வாடிக்கையாளரான திருமதி. ரம்யா என்பவர் பூர்விகா மொபைல்ஸ் கடைக்கு சென்று கேட்டிருக்கிறார். கொஞ்ச நாள் வைத்து பயன்படுத்துங்கள் அதுவாகவே சரியாகிவிடும் என்று கடைக்காரர்கள் சொல்லி அனுப்பியதாக தெரிய வருகிறது ,ஆனால் அந்த பிரச்சனை மொபைலில் தீர்ந்த பாடில்லையாம்,
சாம்சங் சர்வீஸ் கேரில் 29-9 -2021 அன்று முறையிட்டதிலும் ரேம் குறைவாக உள்ள மொபைல் இது, இந்த மொபைலை மாற்றி எல்லாம் தர முடியாது சர்வீஸ் தான் பார்த்து தர முடியும் என்று பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக கூறியதாகவும், அதன் காரணமாக தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், அதற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் மற்றும் மொபைல் போன் வாங்கிய தொகையான 21 ஆயிரத்து 999 ரூபாய் தனக்கு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 35ன் படி இழப்பீடு வழங்க வேண்டும் என்று 30-9-2021 அன்று வழக்கறிஞர் மூலம் அறிவிப்பாணையை அனுப்பியுள்ளார், இந்த அறிவிப்பாணைக்குப் பிறகும் அந்நிறுவனத்தில் இருந்து எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்று தெரிய வருகிறது.
இந்த மனுவின் மறு விசாரணை 26/9/2022 அன்று வந்த போது நுகர்வோர் திருமதி.ரம்யா சார்பில் வழக்கறிஞர் வே. முத்துமாரியம்மன் ஆஜரானார், எதிர்தரப்பில் இருந்து யாரும் ஆஜராகாத காரணத்தால், 26-10-2022 புதன்கிழமை அன்று நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது:
நுகர்வோருக்கு பொருள் இழப்பும், மன உளைச்சலையும் ஏற்படுத்திய பூர்விகா மொபைல்ஸ் நிறுவனமும், சாம்சங் நிறுவனமும் கூட்டாகவோ, தனியாகவோ பாதிக்கப்பட்ட நுகர்வோர் திருமதி.ரம்யாவிற்கு சாம்சங் கேலக்ஸி ஏ 32 மொபைல் போனின் விலை 21,999 ரூபாயையும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10,000 ரூபாயும் வழக்கு நடத்திய மற்றும் இதர செலவுகளுக்கு 10,000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 41,999 ரூபாய் பணத்தை இந்தத் தீர்ப்பானை கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்றும் கொடுக்க தவறும் பட்சத்தில் 12 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.