மாநாடு 03 January 2023
தமிழகத்தில் சில ஆண்டுகளாக தனியார் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு வகையில் மன உளைச்சலுக்கு ஆட்படுத்தி துன்பப்படுத்தும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
அந்நிறுவனங்களுக்கென்று நீதிமன்றத்தில் வாதிட வழக்கறிஞர்களையும் சம்பளம் கொடுத்து பணியில் பல நிறுவனங்கள் அமர்த்தியுள்ளது, அதன் காரணமாக சாமானிய மக்கள் அந்நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை எடுத்துச் சென்று நீதிமன்றத்தில் வாதிட பண வசதியும், நேரமும் இல்லாததால் பொறுத்துக் கொண்டு இன்னல்களை அனுபவித்து வருவதை நம்மில் பலரும் படித்திருப்போம் , பார்த்திருப்போம் , கேள்விப்பட்டிருப்போம், சிலர் அவர்களுக்காக நம்மால் முடிந்த வகையில் ஆலோசனைகள் கொடுத்தும் உதவி இருப்போம்.
மாநாடு இதழில் சில மாதங்களுக்கு முன்பாக டிவிஎஸ் பைனான்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நுகர்வோர் நீதிமன்றம் இழப்பீடு வழங்க ஆணையிட்டிருந்ததை செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.
அதேபோல தற்போது ஸ்ரீராம் பைனான்ஸ்
நிறுவனத்தில் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக கடன் பெற்று அக்கடனை 18 மாத தவணை ஒப்பந்தத்தின்படி மாதம் தவறாமல் எவ்வித நிலுவைத் தொகையும் இல்லாமல் திருப்பி செலுத்திய பிறகும் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் வாகன உரிமையாளருக்கு இருசக்கர வாகனத்தின் அசல் பதிவு புத்தகத்தை( RC Book) தராமல் இழுக்கடித்ததுடன் , சரியான பதிலும் தராமல் அலட்சியமாக நடந்து கொண்டதால் வாகன உரிமையாளர் நுகர்வோர் நீதிமன்றத்தை வழக்கறிஞர் மூலம் அணுகி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நுகர்வோர் நீதிமன்றம் வாகன உரிமையாளரான நுகர்வோரை ஏமாற்றும் படி ஸ்ரீராம் நிதி நிறுவனம் செயல்பட்டு இருப்பதால் தண்டம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அதன் விபரம் பின்வருமாறு:
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வில்வராயன்பட்டி என்கிற ஊரை சேர்ந்தவர் அன்பு சுந்தரம் இவர் தனது வயல்களுக்கு மற்றும் சொந்த பயன்பாட்டிற்காக வெளியில் செல்வதற்காக இருசக்கர வாகனம் புதிதாக வாங்க முடிவு செய்திருக்கிறார், அதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செங்கிப்பட்டியில் உள்ள பாலு ஹோண்டா என்கிற இருசக்கர விற்பனை நிலையத்திற்கு வந்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தை கடனில் பெற்றுக் கொண்டு எளிய முறையில் தவணைத் தொகையை கட்டி முடிக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் இருசக்கர வாகனத்திற்காக 45,000 ரூபாய் கடனாக பெறுவது எனவும் அந்த கடனை 18 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என்ற ஒப்பந்த நிபந்தனையின்படி கடன் பெறப்பட்டு இருசக்கர வாகனம் வாங்கப்பட்டிருக்கிறது, இருசக்கர வாகன கடன் எண்: TANTTW-1312040002.
பெற்ற கடன் தொகையை 18 மாதங்களில் நிலுவை ஏதும் இல்லாமல் கடந்த ஜூன் மாதம் 2016 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. கடன் தொகை முடிந்தவுடன் வாடிக்கையாளரிடம் பெறப்பட்ட ஆவணங்களையும், வாகனத்தின் அசல் பதிவு புத்தகத்தையும் கொடுக்க வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை.
இந்நிலையில் கடனை திருப்பி முறையாக செலுத்திய நுகர்வோர் அன்பு சுந்தரம் தனது வாகனத்தின் ஆர்சி புக்கை பலமுறை நேரில் சென்று கேட்டும் அந்நிறுவனத்தினர் தரவும் இல்லையாம், பதிலும் முறையாக கூறவில்லையாம், ஆர்சி புத்தகம் இல்லாமல் பொதுவெளியில் வாகனத்தை இயக்கி சென்றால் போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிடும் போது கைகட்டி பதில் கூற வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆட்பட்டிருக்கிறார், அதன் காரணமாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்,இதனால் விரக்தி அடைந்த வாகன உரிமையாளரான நுகர்வோர் அன்பு சுந்தரம் என்பவர் தஞ்சாவூரில் உள்ள வழக்கறிஞர் முத்து மாரியப்பனிடம் சென்று தனக்கு நீதி கிடைக்கும் படி செய்ய வேண்டும் என்று முறையிட்டு இருக்கிறார்.
அதனையெட்டி 27-4-2019 அன்று வழக்கறிஞர் முத்து மாரியப்பன் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 12 இன் கீழ், நுகர்வோருக்கு சேவை குறைபாட்டை ஏற்படுத்திய ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அறிவிப்பு அனுப்பியுள்ளார், அதனை 30-4-2019 அன்று நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.வழக்கறிஞர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வாகன உரிமையாளரான அன்பு சுந்தரம் 2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள பாலு ஹோண்டா நிறுவனத்தில் இருசக்கர வாகனம் வாங்கி இருக்கிறார் அதற்கு ஸ்ரீராம் நிதி நிறுவனத்தினர் 45000 ரூபாய் கடன் வழங்கியிருந்தது கடன் தொகையை 18 மாதங்களில் எவ்வித நிலுவையும் இல்லாமல் வாகனத்தின் உரிமையாளர் கட்டி முடித்து விட்ட நிலையில் பலமுறை நேரில் சென்று கேட்டும் ஒரிஜினல் ஆர்சி புக்கை நிறுவனத்தினர் வழங்காமல் இருப்பதால் வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல முடியவில்லை என்றும் எப்போதாவது வாகனத்தை வெளியில் எடுத்துச் செல்லும்போது போக்குவரத்து காவலர்கள் நிறுத்தி சோதிக்கும் போது கைகட்டி பதில் கூற வேண்டிய நிலை இருப்பதால் அன்பு சுந்தரம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்றும் நுகர்வோருக்கு சேவை குறைபாட்டை ஏற்படுத்தி மன கஷ்டமும், பொருள் கஷ்டமும் ஏற்படுத்திய ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் இழப்பீட்டுத் தொகையாக 3 லட்சம் ரூபாயை வாகன உரிமையாளரான நுகர்வோர் அன்பு சுந்தரத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
14-12-2022 ஆம் தேதி அன்று இவ்வழக்கின் இறுதி விசாரணை வந்தது. வழக்கு நடந்த விதம், கொடுக்கப்பட்ட சாட்சி ஆவணங்கள் ஆகியவற்றை சீர்தூக்கி பார்த்த தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறது.
அதன்படி ஸ்ரீராம் நிதி நிறுவனம் உண்மைக்கு மாறாக பொய்யுரைத்திருப்பதாக கூறியுள்ள ஆணையம் 2014 ஆம் ஆண்டு இருசக்கர வாகனம் வாங்கி 18 மாதங்களில் வாங்கிய கடனை திருப்பி அடைத்த நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஸ்ரீராம் நிதி நிறுவனம் ஒரிஜினல் ஆர்சி புத்தகத்தை வழங்காததற்கு கூறியுள்ள காரணங்களையும், அதற்குச் சான்றாக இம்மன்றத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற ஆவணங்களும் ஏற்புடையதாக இல்லை என்றும் ஸ்ரீராம் நிதி நிறுவனம் ஒரிஜினல் ஆர்சி புத்தகத்தை பாதுகாப்பு கருதி திருச்சி மண்டல அலுவலகத்தில் வைத்திருப்பது வழக்கம் என்றும் ஒரிஜினல் ஆர்சி புத்தகத்தை 21-5-2019 அன்று பதிவு தபாலில் வாடிக்கையாளருக்கு அனுப்பியதாகவும், அதனை ஏற்க மறுத்து வாடிக்கையாளர் திருப்பி அனுப்பியதாகவும் கூறியிருப்பதையும், 3-7-2019 அன்று வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பி இருப்பதில் ஒரிஜினல் ஆர்சி புத்தகத்தை தற்போது ஸ்ரீராம் நிதி நிறுவனம் தர தயாராக இருப்பதாகவும் கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம், கடன் கடந்த ஜூன் மாதம் 2016 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது, அதன் பின் ஏறக்குறைய 2 வருடம் 10 மாதங்களுக்கு பிறகு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி 3 மாதங்கள் கழித்து பதில் அளித்து இருக்கிறார்கள், அதிலும் ஆர்சி புத்தகத்தை பதிவு தபாலில் அனுப்பியதாக கூறி பதிவு தபாலின் உரையின் நகலை மட்டும் சாட்சி ஆவணமாக இவ்வாணையத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள், ஆணையத்தின் மூலம் தீர்வு காண்பதற்காக முறையிடப்பட்ட போதாவது இவ்வாணையத்தில் ஒரிஜினல் ஆர்சி புத்தகத்தை சமர்ப்பித்து இருக்க வேண்டும். அதனை விடுத்து இதுவரை ஒரிஜினல் ஆர்சி புத்தகத்தை நுகர்வோருக்கு வழங்காமல் இருப்பதால் ஸ்ரீராம் நிதி நிறுவனம் நுகர்வோருக்கு சேவை குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளது என்று அறிய முடிகிறது , அதன் காரணமாக நுகர்வோருக்கு
ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் , வீண் அலைச்சலுக்கும் இழப்பீட்டுத் தொகையாக 25000 ரூபாயை கடன் முடிவு பெற்ற நாளான ஜூன் 2016 முதல் 12 விழுக்காடு வட்டித் தொகையுடன் இந்த நகல் கிடைக்கப் பெற்ற 6 வாரத்திற்குள் தர வேண்டும் என்றும் , கூடுதலாக செலவுத்தொகை 10,000 தர வேண்டும் என்றும் , தரத் தவறும் பட்சத்தில் ஆண்டு ஒன்றிற்கு 14 விழுக்காடு வட்டியுடன் கொடுக்க வேண்டும் என்றும் 28-12-2022 அன்று தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பரபரப்பு தீர்ப்பளித்து இருக்கிறது.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.