மாநாடு 15 January 2023
ஏர் பிடித்து பாருக்கே சோறு போட்ட பண்பட்ட பாரம்பரியமிக்க தமிழினத்தின் தன்னிகரில்லா விழாவாக பன்நெடுங்காலமாக கொண்டாடி வரும் தமிழர் திருநாள் பெருவிழாவின் முக்கிய கொண்டாட்டமாக விளங்கிவரும் உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் சல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் 1004 காளைகளும், 318 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர், பாதுகாப்பு பணியில் 1300 காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள், போட்டியில் சிறந்த வீரருக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு மகிழுந்தும் (car) அமைச்சர் உதயநிதி சார்பில் 2 இருசக்கர வாகனமும் மற்றும் பீரோ, தங்க மோதிரம் , வெள்ளி காசு, தங்க காசு, ரொக்க பணம் மற்றும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்ட இருக்கிறது.
போட்டியின் முதல் சுற்றில் 61 காளைகள் அவிழ்க்கப்பட்டதில் 4 காளைகளைப் பிடித்து ரஞ்சித் குமார் என்கின்ற மாடுபிடி வீரர் முதலிடம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றில் 115 காளைகள் அவிழ்க்கப்பட்டதில் 9 காளைகளை பிடித்து அவனியாபுரம் கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்திருக்கிறார் அதனைத் தொடர்ந்து சல்லிக்கட்டு போட்டி ஒழுக்க நெறியுடன், சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது, தமிழரின் வீரம் இன்னமும் வீழ்ந்து விடவில்லை என்பதை வீரர்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் வீரர்களுக்கும், உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கும், உழவையே உயிரென வாழும் உழவர்களுக்கும், உள்ளன்போடு உறவு பாராட்டி வரும் உலகத்தார் அனைவருக்கும் மாநாடு செய்தி குழுமத்தின் சார்பில் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.