மாநாடு 27 January 2023
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள கணபதி அக்கிரகாரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடையை இடம் மாற்றுவதை தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் காத்திருப்பு போராட்டத்தை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தற்போது நடத்தி வருகிறது.
கணபதி அக்கிராரத்தில் இயங்கி வரும் மதுபான கடை எண்:8129 பொதுமக்களுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையூறாக இடமாற்றம் செய்யப்பட உள்ளதை தடுக்க கோரி தன்னெழுச்சியாக அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மக்கள் கூறும்போது வேளாண் மண்டலம் என்று அறிவித்த தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு நடுவில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பது விவசாயிகளான எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
காவிரி வடகரையில் குடியிருப்புகளுக்கு மிக அருகில் கூட்டுறவு வங்கி, அங்கன்வாடி அருகில் காவிரி ஆற்றில் குளிக்க செல்லும் மக்களுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் படி அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை அமைக்க முயற்சிப்பதை தடுத்திட கோரி, பொதுமக்கள் ஆட்சேபனையும் மதிக்காமல் இந்த இடத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் அமைக்க கூடாது என்றும், மதுபான கடை அமைப்பதை தடுத்திட வேண்டும் என்று பாபநாசம் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வி.முரளிதரன் தலைமையில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் விரும்பாத எந்த இடத்திலும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அமைக்க கூடாது என்று தனது அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார். இதையும் மீறி தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இதுபோல ஆங்காங்கே விவசாய நிலங்கள் மத்தியில் மதுபான கடை அமைப்பது மக்களுக்கு இடையூறாக அமையும் என்றும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அவமதிக்கும் வகையிலும் , தஞ்சை மாவட்ட டாஸ்மாக் மண்டல அலுவலர்கள் நடந்து கொள்வதாக மக்கள் கூறுகின்றார்கள். மக்களின் குரலுக்கு செவி சாய்த்து உடனே அகற்றக்கோரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறார்கள். பொதுமக்களின் ஒரே கருத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் வேண்டாம் என்பதே.
செய்தி – இராசராசன்