Spread the love

மாநாடு 11 April 2022

அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர் 2017ஆம் ஆண்டில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் ரத்து செய்யப்பட்டு அவரை கட்சியில் இருந்தும் நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் ஏற்படுத்தப்பட்டது. சசிகலா நியமித்த துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதுடன், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்து, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு ஏற்படுத்தப்பட்ட, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை மாவட்ட 4ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டுமென்றும் சசிகலா கூடுதல் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டதாகவும் சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இடையீட்டு மனு மீதான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை 4ஆவது உரிமையியல் நீதிமன்றம் நிதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என உத்தரவிட்டுள்ளார்.மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அதிமுக தரப்பும், சசிகலா தரப்பும் மிகவும் எதிர்பார்த்திருந்த நிலையில் வெளிவந்திருக்கும் இந்தத் தீர்ப்பு இருதரப்பினரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

29990cookie-checkசசிகலா வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விபரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!