மாநாடு 27 October 2022
இன்று காலை 7:40 மணியிலிருந்து 8:40 மணி வரை ஏறக்குறைய ஒரு மணி நேரம் தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் கந்தர்வகோட்டைக்கு அருகில் இருக்கும் தெத்து வாசல் பட்டியில் , பள்ளி மாணவர்களும் ,இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து நடத்திய சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியலுக்கான காரணம் பின்வருமாறு: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் மஞ்சப்பேட்டை என்கிற ஊருக்கு 74 எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்திருக்கிறது, அதேபோல ஏ 60, பி 60, சி 60 , டி60 என்கிற எண் கொண்ட அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்திருக்கிறது, இவ்வாறாக இயக்கப்படும் பேருந்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிராமத்தின் உள்ளேயும் சென்று நகரப் பகுதிக்கு வேலைக்கு செல்கின்ற மக்களையும், கல்வி, கல்லூரிக்கு செல்கின்ற மாணவர்களையும் ஏற்றி வருவது வழக்கமாம்.
உதாரணமாக 60 எண் கொண்ட பேருந்து ஒன்று மஞ்ச பேட்டை உள்ளே சென்று வருமாம், மற்றொரு 60 எண் கொண்ட பேருந்து அரியாணிப் பட்டி உள்ளே சென்று மக்களை ஏற்றி வருமாம், மற்றொரு 60 எண் கொண்ட பேருந்து வீரடிப்பட்டி உள்ளே சென்று மக்களை ஏற்றி வருமாம், இது மட்டுமல்லாமல் கந்தர்வகோட்டை – பட்டுக்கோட்டைக்கு ஒரு அரசு விரைவு பேருந்து இயக்கப்படுமாம் அந்த பேரூந்தும் இந்த மக்களை அனைத்து இடங்களிலும் நின்று ஏற்றி நகரப் பகுதிகளுக்கு கொண்டு சேர்த்து மக்களுக்கு சேவையாற்றி வந்திருக்கிறது.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ,இவர்களுக்கு தஞ்சாவூர் தான் அருகில் இருக்கிறது என்பதால் உயர்கல்விக்கும், கல்லூரிகளுக்கும் ,பணிகளுக்கும் தினந்தோறும் ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் தஞ்சாவூர் வரவேண்டிய சூழலில் இருக்கிறார்கள், இவர்களின் தேவையை நிறைவு செய்யும் விதமாக சேவையாற்றி வந்த 5 பேருந்துகள் தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படாமல்
பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வந்திருக்கிறது,
இதனால் மாணவர்கள் உட்பட அனைவருமே கடும் பாதிப்புக்கு உள்ளானதாகவும் அதன் காரணமாக இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்த மக்கள் கூறுகிறார்கள். சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் கந்தர்வகோட்டை காவல் நிலை ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மக்கள் கலைந்து சென்று இருக்கிறார்கள்.
குடித்துவிட்டு தள்ளாடி விழுபவர்களுக்கு தடுக்கி விழும் தொலைவில் குடிக்க அரசின் டாஸ்மாக் குடிப்பகம் இருக்கிறது.
படித்துவிட்டு தலைதூக்க நினைக்கும் மாணவர்களுக்கு ஊருக்கு அருகில் அரசின் படிப்பகம் இல்லை என்ற போதிலும் ஓடி, தேடி படிக்க போகும் மாணவர்களுக்கு போக்குவரத்தும் இப்போது தடை செய்யப்பட்டிருப்பதென்பது மிகப்பெரிய கேவலம் இதனை உடனடியாக தமிழக அரசு சரி செய்ய வேண்டும்.
செய்தி -ரெஜிஸ்