மாநாடு 10 ஏப்ரல் 2023
தஞ்சாவூர் மாநகரில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் கோயில் திருவிழாக்களில் முக்கியமானது விளார் சாலை அண்ணா நகரில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தின் போது 10 நாட்கள் கொண்டாடப்படும் தீமிதி திருவிழா .
ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை நான் பார்க்கும் போதும் இந்தக் கோயிலைப் பற்றியும் பர்மா காலனி பற்றியும் அறிந்து தெரிந்து எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இந்த ஆண்டு 58 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அச்சிடப்பட்ட துண்டறிக்கை எனக்கு கிடைக்கப்பெற்றது. அதனைத் தொடர்ந்து நமது அரசியல் மாநாடு இதழில் இந்தக் கோயிலைப் பற்றியும் பர்மா காலனி மக்களைப் பற்றியும் அறிய முற்பட்டோம் அதில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பலர் மியான்மருக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு 1960 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் போது அங்கிருந்து தமிழர்கள் விரட்டப்பட்டதாகவும் அப்போது தன் தாய் மண்ணிற்கு தமிழர்கள் வந்ததாகவும் பர்மாவிலிருந்து வந்ததால் அவர்கள் வாழும் பகுதியை பர்மா காலனி என்று அழைப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனைப் பற்றி மேலும் அறிய சிலரிடம் தொடர்பு கொண்டு பேசினோம் அவர்கள் கூறும்போது 17ஆம் நூற்றாண்டில் மருது பாண்டியர் காலத்தில் சிவகங்கை சீமையில் வெள்ளையரை எதிர்த்து தொடர்ந்து போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் பொருளாதாரம் தங்களது வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு நலிவுற்றதாகவும் அந்த நேரத்தில் காரைக்குடி செட்டியார்கள் பர்மாவிற்கு சென்று நிலங்களை வாங்கியதாகவும் அந்த நிலங்களில் வேலை செய்வதற்கு சிவகங்கை சமஸ்தானத்தை சுற்றியுள்ள கமுதி, மானாமதுரை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை அழைத்துச் சென்றதாகவும் ஏறக்குறைய 3 தலைமுறைகள் அங்கேயே தமிழர்கள் வாழ்ந்ததாகவும் அங்கு ஏற்பட்ட உள்நாட்டு போரின் போது பாதிக்கப்பட்ட மக்களை ஜவர்கலால் நேரு தலையிட்டு 1960 கால வாக்கில் மீட்டு அவர்கள் எங்கு குடியமர விரும்புகிறார்களோ அங்கேயே வாழ வழியும் செய்தார்கள் என்கிறார்கள்.
அப்போது தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் மக்கள் குடியேற தொடங்கினார்களாம் பர்மாவில் இருந்து வந்த மக்கள் ஒரே பகுதியில் ஒன்றிணைந்து வாழும் இடம் பர்மா காலனி என்று பெயர் பெற்றதாம் அப்படி தஞ்சாவூரில் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்த பகுதி விளார் சாலையில் உள்ள அண்ணா நகர் இந்தப் பகுதி அப்போது கூரையார் என்பவருக்கு சொந்தமான இடமாக இருந்ததாம் இவர்கள் வந்து அந்த இடத்தில் குடியேற ஆரம்பித்தபோது இவர்களுக்கு துணையாக அவர்களும் இருந்து மக்களை நேசித்து ஆதரித்து அரவணைத்தார்களாம் அதனை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டும் வகையில் இன்றளவும் பூக்கார 1ஆம் தெருவில் இருக்கும் அவரது வீட்டிற்கு திருவிழாவின் போது தீச்சட்டியோடு சாமி நகர்வலம் வரும்போது சில தெருக்கள் தாண்டி அவரது வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
அதேபோல இந்த மக்கள் அங்கிருந்து வந்து குடியேறிய போது ஆதரவாக காத்து நின்ற பல முக்கியமானவர்களில் தியாகி நடேச தொண்டமார் என்பவர் குறிப்பிடத்தக்கவராம் அவரது பரம்பரையினர் இன்றளவும் அங்காள ஈஸ்வரி கோயிலில் முதல் உபயம் செய்து வருவதாகவும் இவரது சிலை பர்மா காலனி ஆறாம் தெருவில் இருப்பதாகவும் கூறினார்கள்.
இந்தப் பகுதியை பொருத்தமட்டில் மொத்தம் 20 தெருக்களும், 2 பஞ்சாயத்துக்களும் அதாவது புதுப்பட்டினம் மற்றும் விளார் பஞ்சாயத்துக்களை உள்ளடக்கியுள்ளது இங்குள்ள தெருக்கள் பெரிய வாகனங்கள் செல்லும் அளவிற்கு இட வசதியோடு அகலமாக மிகவும் திட்டமிட்டு சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.
அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோயிலைப் பற்றி கூறுங்கள் என்று கேட்டோம் பர்மாவில் பீலிக்கான் என்கிற ஊரில் அமைந்திருக்கிறது அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோயில். இங்கிருந்து சென்ற தமிழர்கள் அந்த சாமியை வழிபட்டு வந்திருக்கிறார்கள் இவர்கள் இங்கு வரும்போது அந்தக் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வரப்பட்டு அதனை வைத்து ஆரம்பத்தில் சிறிய குடிலாக கட்டி வழிபட துவங்கியிருக்கிறார்கள்.
தற்சமயம் தங்களது உழைப்பால் உயர்ந்த மக்கள் தங்களது சாமிக்கு 10நாள் விழா எடுத்து கொண்டாடி வழிபட்டு மகிழ்கின்றார்கள். பங்குனி உத்திரத்தின் போது நடைபெறும் பத்து நாள் தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ள சொந்த பந்தங்கள் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து தங்கி பாசத்தை பகிர்ந்து செல்வார்களாம். இதே போல அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் பர்மாவில் இருந்து வந்த தமிழர்கள் வாழும் பல ஊர்களிலும் இருக்கின்றதாம் அதன்படி சென்னை, வியாசர்பாடி, செங்குன்றம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருப்பதாக கூறுகிறார்கள்.
தற்போது இங்கு இருப்பவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் பெரும் பொறுப்பில் இருக்கிறார்கள், அரசு அதிகாரிகளாகவும் , விளையாட்டு வீரர்களாகவும், தொழிலதிபர்களாகவும் இருக்கிறார்கள். உழைத்தால் உயரலாம் என்பதற்கு வாழும் சாட்சிகளாக இங்குள்ள மக்கள் வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் விளார் சாலை அண்ணா நகர் பகுதியில் உள்ளது புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் சுலபமாக இந்த கோயிலுக்கு செல்லலாம். வாய்ப்புள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு சாமியின் வரத்தை பெறுங்கள் வாழ்க்கையில் உயருங்கள்.