மாநாடு 10 January 2024
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கூடிய பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களும் கோரிக்கைகளை முன்னிறுத்தி தற்போது பணியில் இருக்கும் தொழிலாளர்களோடு போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் செய்ய முற்பட்டபோது காவலர்கள் கைது செய்தனர் அதன் விவரம் பின்வருமாறு ;
போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வு பெற்றவர்களின் 102 மாத கால அகவிலைப்படி உயர்வு, ஓட்டுனர் நடத்துனர் தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட 30,000 காலிப் பணியிடங்கள் நிரப்புதல், வாரிசு பணி, போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 9 ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து இன்று 10.01.24 இரண்டாவது நாளாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோரிக்கை முழக்கத்துடன் பேரணியாக சென்று அண்ணா சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து சாலையில் அமர்ந்து பேருந்துகள் செல்ல விடாமல் மறியல் போராட்டத்தை நடத்தினர்.மறியல் போராட்டத்தில் 500 போக்குவரத்து தொழிலாளர்களும், ஓய்வு பெற்றவர்களும் பங்கேற்றனர். இதில் 50 பேர் கைதாகி தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர் . தஞ்சையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியூ மத்திய சங்க தலைவர் காரல்மார்க்ஸ் ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் எஸ். தாமரைச்செல்வன், அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஆர்.நீலகண்டன், டிஎம்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.சுப்பிரமணியன், அரசு விரைவு போக்குவரத்து சங்க சிஜடியூ தலைவர் ஜெ.வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். வேலை நிறுத்தத்தில் ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், மாநில குழு உறுப்பினர் டி.கஸ்தூரி,சிஐடியு பொருளாளர் எஸ்.ராமசாமி,நிர்வாகி முருகசக்தி, அதிகாரிகள் நலச்சங்க நிர்வாகிகள். ஜெ.சந்திரமோகன், சிதம்பரநாதன், பொறியாளர் சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், அசோகன், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஓய்வு பெற்றோர் நல சங்க தலைவர் ஏ.கணேசன், ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, டி.தங்கராசு, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஞானசம்பந்தம், ஜெயக்குமார், நேதாஜி சங்க தலைவர் ஜெயக்குமார், பிஎம்எஸ் சங்க பொதுச்செயலாளர் வைத்தீஸ்வரன், ரிவா சங்க ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் ஞானசேகரன், பாஸ்கரன்,டிஏ மீட்பு குழு நிர்வாகி தஞ்சை ராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக சிபிஐஎம் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, சிஐடியூ மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், துணை செயலாளர் கே.அன்பு, ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஆகியோர் பங்கேற்றனர். கும்பகோணம் கழகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட 10 கிளைகளிலும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். இதில் தஞ்சையில் 50 பேர் உட்பட தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 300 பேர் கைதாகினர். தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு முடிவு காணப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.