இந்த ஃபைலால் திமுகவிற்கு சிக்கல்
தமிழகத்தில் சிறுபான்மையினரின் காவலனாக திமுக நம்பப்படுகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிரான விஷயங்களை முன்னெடுக்கும் போது திமுக எதிர்க்குரல் எழுப்புமாம். அந்த நம்பிக்கையில்தான் முன்பு வாஜ்பாய் தலைமையிலான பிஜேபியுடன்
திமுக கைகோர்த்த நிலையிலும் கூட சிறுபான்மையின மக்கள் அக்கட்சிக்கு ஆதரவாக நின்றார்களாம்.
அதில் ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரவையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த பேரவையை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 36 லட்சம் பேர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வாக்குகளும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடி ஆட்சியில் அமர உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது.ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக இருக்கும் பேராயர் அந்தோணி பாப்புசாமி, திமுக உடன் இணக்கமான போக்கை தொடர்ந்து வந்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது, அவரது வீட்டிற்கே சென்று வாழ்த்துகளை தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரவை சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களுக்கான பிரதிநிதித்துவம், உபதேசியார் மற்றும் ஆலய பணியாளர் நல வாரியம், மீனவ நல வாரியம், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் போன்றவற்றில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்ததாம்.
இதுதொடர்பான ஃபைல் ஒன்று முதல்வர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டுள்ளதாம். இதற்காக ஒரு மாதம் காத்திருந்த நிலையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் வில்சன் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரவை சார்பில் இருக்கும் கோரிக்கைகளை அளித்திருக்கிறார். முதல்வரிடமும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
அதில் மதுரையை சேர்ந்த சமூக சேவகர் எஸ்.வி.ஜானுக்கு வாரியப் பதவி வழங்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஆனால் இதுதொடர்பான ஃபைல் முதல்வர் அலுவலகத்தில் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஏமாற்றத்தில் இருக்கும் ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரவையினர்,வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை ஏன் எடுக்கக் கூடாது? என்று சிந்திக்க தொடங்கியுள்ளார்களாம்.
இதுதொடர்பாக விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் தழுவிய கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவு திமுகவிற்கு எதிரானதாக இருந்தால், அது நிச்சயம் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் பலமே பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது. இதில் கோட்டை விட்டுவிட்டால் அரசியல் செய்வதில் சிக்கல் உண்டாகுமாமா என்ன நடக்கிறது பொறுத்திருந்து பார்போம்.