மாநாடு 24 February 2022
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் , 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்றது.அதனை தொடர்ந்து 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஈரோடு உள்ளாட்சி தேர்தலில் மனைவி தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாம்ளையம் பேரூராட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது .மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 9 வார்டிலும் , அதிமுக 2 வார்டிலும் , சுயேட்சைகள் 4 வார்டிலும் வெற்றி பெற்றனர் .12 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பெரியூர் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது மனைவி சகுந்தலா , திமுக வேட்பாளர் மகேஸ்வரியிடம் தோல்வி அடைந்தார்.திமுக வேட்பாளர் மகேஸ்வரி 468 வாக்குகள் பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் சகுந்தலா 113 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இதனால் மனமுடைந்த சகுந்தலாவின் கணவரும் , அதிமுக பிரமுகருமான துரை சாமி பூச்சி மருந்து குடித்தார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.அவரது உடலை கொண்டு வந்து சத்தியமங்கலம் காவல் துறையினருக்கு தெரியாமல் எரித்ததாகவும் கூறப்படுகிறது.
துரைசாமி அதிமுகவில் மாவட்ட பிரதிநிதி பொறுப்பில் இருந்துள்ளார். மனைவி தேர்தலில் தோற்றதால் விரக்தி அடைந்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல வாக்கு எண்ணிக்கை நடந்த 22ந்தேதி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற சுகுணா என்பவரின் கணவர் நாகராஜ் (58)விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோல சம்பவங்களைப்பற்றி ஏன் இப்படி தற்கொலையில் இறங்குகிறார்கள் என்று அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது:
இதற்கு முன்பும் பல தேர்தல்களை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது ஆனால் அப்போதெல்லாம் இவ்வளவு பணம் சர்வசாதாரணமாக கொடுக்கப்படவில்லை பல இடங்களில் தேர்தல் முறைகேடுகள் நடக்கும் இல்லை என்று மறுப்பதற்கில்லை ஆனால் இந்த முறை சில பத்திரிகைகள் வாயிலாக பார்க்கும்போது சாதாரண கவுன்சிலர் தேர்தலுக்கே ஒரு ஓட்டுக்கு சில இடங்களில் குறைந்தபட்சம் 500ரூபாய் தொடங்கி ஒரு ஓட்டுக்கு 40 ஆயிரம் கூட தரப்பட்ட செய்தியைப் பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.ஏனென்றால் இந்தியாவின் சனநாயகம் மிகப் பெரியது ஆனால் இன்று பணத்தால் முறியடிக்கப்பட்டு விட்டது என்பது சாதாரணமாகவே அனைவருக்குமே தெரிந்ததாக இருக்கிறது.அதன்படி பார்க்கும்போது ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்தையும் சேர்த்து 20 லட்ச ரூபாயாவது செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
இப்படி செலவு செய்ய முடியும் என்றால் மட்டுமே பெரிய கட்சிகள் என்று சொல்லக்கூடிய திமுகவும்,அதிமுகவும் வேட்பாளராக நிற்க வாய்ப்பு கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எப்படியாவது நாம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற சூழலில் கடன் வாங்கியாவது செலவு செய்து விட வாய்ப்பு உள்ளது. தேர்தலில் தோல்வியடையும் பட்சத்தில் கடன் சுமை தாங்காமல் கூட இவ்வாறான விபரீத முடிவுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.ஆனால் இது தவிர்க்கப்பட வேண்டும் இனி இது போல தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்று வருத்தத்தோடு பதிவு செய்தார்கள்.