Spread the love

மாநாடு 26 March 2022

வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் அடுத்த பலராமன் தெருவை சேர்ந்தவர் துரைவர்மன். புகைப்பட கலைஞராக இருந்த இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எலெக்டிரிக் இருசக்கர வாகனம் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இந்த வாகனத்திற்கு இவர் நேற்று இரவு சார்ஜ் போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வாகனம் திடீரென வெடித்து பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இந்த தீ பக்கத்தில் இருந்த இருசக்கர வாகனத்திலும் பிடித்து அடுத்தடுத்து வீடு முழுவதும் பரவியுள்ளது. இதையடுத்து அவர் வெளியில் தப்பிக்க முயற்சி செய்தும் முடியாத காரணத்தாலும், புகை மூட்டத்தை தாக்கு பிடிக்க முடியாததாலும் துரைவர்மன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக தனது 13 வயது மகள் ப்ரீத்தியை அழைத்துக்கொண்டு கழிவறைக்குள் சென்று அமர்ந்துள்ளார்.

சற்று நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய தந்தையும் மகளும் தொடர்ந்து தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீயை அணைத்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில் பொதுமக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ள நிலையில் இதுபோன்ற விபத்துக்கள் பீதியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இந்த சம்பவத்தையொட்டி தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

வேலூரில் எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும்போது பேட்டரி வெடித்து தந்தை மகள் பலியானார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார், பைக்குகளை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு எலக்ட்ரிக் கார், பைக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில், பைக் சார்ஜ் செய்யும்போது பேட்டரி வெடித்து இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும் போது தானாகவே வெடிப்பது என்பது அதன் தரத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. எனவே, எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தைக்கு வரும் முன்பே அதனுடைய தரம் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இதன்மூலம் தரமற்ற வாகனங்கள் விற்பனை செய்வது தடுக்கப்படுவதோடு, விபத்துகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அப்போதுதான் மக்களுக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது நம்பிக்கையும் ஏற்படும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த தந்தை மகள் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட எலக்ட்ரிக் பைக் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

27120cookie-checkஎலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!