மாநாடு 17 February 2023
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒருவரின் வாழ்வு, எதிர்காலம் அதனை நெஞ்சில் நிறுத்தி மக்களின் குறைகளை தீர்ப்பதை மாவட்ட ஆட்சியரும் அவரின் கீழ் உள்ள அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார், தொய்வின்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.
இந்நிலையில் ராகவாம்பாள்புரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட துறையூண்டார் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தங்களது ஊரில் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் செயல்படாமல் ஏறக்குறைய 6 மாதங்களாக பூட்டி கிடப்பதாகவும் ,
இதனால் எங்கள் பஞ்சாயத்தில் உள்ள துறையூண்டார் கோட்டை, சடையார் கோயில், சின்னபுலி குடிக்காடு, நார்தேவன் குடிக்காடு, ஆர்சுத்திப்பட்டு உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டு வரி கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் ஊராட்சி மன்ற தலைவரை அணுகி தங்கள் தேவைகளை பெற்றுக் கொள்ள மிகவும் அவதிப்படுகிறார்கள் என்றார்.
மேலும் ஏற்கனவே நார்தேவன் குடிக்காடு என்கிற கிராமத்தில் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற கட்டிடம் இயங்கி வந்தது, இப்போதும் அந்த கட்டிடம் நன்றாகவே இருக்கிறது ஆனால் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள அமலா ராஜகோபால்
ஊராட்சி மன்ற கட்டிடத்துக்கு வந்து பணியாற்ற கூடாது என்கிற தன் சொந்த விருப்பத்திற்காக ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.அமலாவின் கணவர் ராஜகோபால் என்பவர் நன்றாக இயங்கி வந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை பூட்டி வைத்திருக்கிறார்.
இங்கு ஊராட்சி மன்ற தலைவரும் வருவதில்லை, ஊராட்சி மன்ற செயலாளரும் வருவதில்லை இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர், என்றும் தானே பல மாதங்களாக வீட்டு வரி ரசீது வாங்குவதற்காக முயற்சி செய்தும் இதுவரை வாங்க முடியவில்லை என்றும் முறையாக செயல்படாத ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்
ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நான் கேட்ட தகவலுக்கு பொய்யான தகவலை அதாவது கட்டிடம் பழுதாக இருக்கிறது என்று தவறாக தகவல் தந்த ஊரக வட்டாட்சி வளர்ச்சி அலுவலர், ஒரத்தநாடு ஊராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுத்து இவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த 29-12-2022 அன்று தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்திருப்பதாகவும், நார்தேவன் குடிக்காடு என்கிற கிராமத்தில் தான் 20 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற கட்டிடம் இயங்கி வந்தது இதனைச் சுற்றி மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இருக்கிறது
இதனை எல்லாம் சுட்டிக்காட்டி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினேன் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றார் முருகானந்தம்.
அவரிடம் நீங்கள் கேட்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி நகல் முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவின் நகல், அவர்கள் கொடுத்த தகவலின் நகல் உள்ளிட்டவற்றை கொடுங்கள் என்று கேட்டோம் அவரும் அவற்றையெல்லாம் நம்மிடம் கொடுத்தார்,
அதனடிப்படையில் ஆய்வு செய்து பார்க்கின்ற போது ராகவாம்பாள்புரம் பொது தகவல் அலுவலர் கொடுக்கப்பட்டிருக்கின்ற தகவலில் 1994 ஆம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டதாகவும் பழைய கட்டிடம் என்பதால் பழுது அடைந்து விட்டது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரத்தநாடு துணை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கின்ற தகவலின் படி 1978 ஆம் ஆண்டு இக்கட்டிடம் கட்டப்பட்டதாக தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது, இதன் அடிப்படையிலேயே பார்த்தால் கூட ஏதோ ஒரு உள்நோக்கத்தால் கட்டிடம் மூடப்பட்டிருப்பதாகவும் ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க உளப்பூர்வமாக பணியினை மேற்கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது.
கள ஆய்வில் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் செய்கிறார் முதல்வர் தன் தனிப்பிரிவிற்கு வந்த கடிதத்தின் மீதான நடவடிக்கைக்கு ஏன் நாட்களை நகர்த்துகிறார் ?
அறிவுறுத்தலோடு நிற்பாரா முதல்வர் ஆக்சனில் இறங்குவாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.