மாநாடு 1 September 2022
தஞ்சாவூர் களி மேட்டில் அப்பர் திருவிழாவில் தேர் மின்கம்பங்களில் உரசி விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியானது அந்நிகழ்வு அந்த ஊரை மட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டத்தை தாண்டி மாநிலம் முழுவதும் பெறும் சோகத்தை உண்டு பண்ணியது.அந்த நேரத்தில் தாழ்வாக உயரம் குறைவாக உள்ள மின் கம்பிகளை உயர்த்தவும் ,பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றவும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இருந்த போதும் இப்போதும் கூட தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களிலும் மின் கம்பிகள் உயரம் தாழ்வாகவும், வலுவிழந்த மின்கம்பங்கள் பல இடங்களில் இருப்பதை காண முடிகிறது. இவற்றையெல்லாம் சரி செய்வதாக உறுதி கொடுத்த அதிகாரிகளும் செய்யவில்லை,
அவர்களிடம் வேலை வாங்க வேண்டிய , ஆட்சியாளர்களும் , அடுத்த உறுதிமொழியை வேறு ஊருக்குச் சென்று, வேறு மக்களுக்கு கொடுக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.என்பதை நிரூபிக்கும் விதமாக சாலையில் உள்ள பள்ளங்களும், சாலைகள் இல்லாத தெருக்களும், நெல் கொள்முதல் நிலையத்தில் முளைத்து கிடக்கும் நெல் மூட்டைகளும் இவர்களின் ஆட்சியின் சாதனைகளை அறியச் செய்கிறது.
நேற்று விநாயகர் சதுர்த்தி விழா அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்பட்டது அதன்படி விருதுநகர் ராஜபாளையம் அருகே உள்ள மாவட்டம் சொக்கநாதன் புத்தூரில் ஊரின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா சிலை வைத்து கொண்டாடப்பட்டிருக்கிறது, அந்த விநாயகர் சிலையை நேற்று இரவு 10:30 மணி அளவில் ஊர் மக்கள் சேர்ந்து குளத்தில் கரைப்பதற்காக தேரில் வைத்து வீதிகளின் வழியே எடுத்து சென்று குளத்தில் கரைத்திருக்கிறார்கள். சிலையை கரைப்பதற்காக சென்ற அனைவரும் வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்நிலையில் சொக்கநாதன் புத்தூரைச் சேர்ந்த ராசு என்பவரின் மகன் 24 வயதுடைய முனீஸ்வரன் மற்றும் கருப்பையா என்பவரின் மகன் 33 வயது உடைய மாரிமுத்துவும் விநாயகர் சிலையை கரைப்பதற்காக எடுத்துச் சென்ற சப்பரத்தை திரும்ப கோயிலுக்கு இழுத்துச் சென்று இருக்கின்றார்கள். அப்போது சப்பரத்தின் மேல் இருந்த இரும்பு கம்பி மின்கம்பியில் உரசியதால் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
இதில் முனீஸ்வரன், மாரிமுத்து, செல்வகிருஷ்ணன் , செல்லப்பாண்டி , முப்பிடாதி உள்ளிட்ட 5 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான 5 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் செல்லும் வழியிலேயே மாரிமுத்து, முனீஸ்வரன் இருவரும் இறந்திருக்கிறார்கள். இவர்களின் உடல்களை பிணவறையில் வைத்திருக்கிறார்கள் மீதமுள்ள 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், இவர்களை காண்பதற்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மருத்துவமனைக்கு இன்று காலை வந்தனர், விபத்துக்குள்ளான குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து சாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமரன், விஜயகுமார் உள்ளிட்ட காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த விபத்தால் அந்த ஊர் மக்களும் உறவினர்களும் சுற்று வட்டார மக்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தஞ்சாவூரைத் தொடர்ந்து விருதுநகரிலும் மின் கம்பி உரசியதால் விபத்து ஏற்பட்டதில் விலைமதிப்பற்ற உயிர்களை பலி கொடுத்திருக்கிறார்கள் வாக்களித்த பொதுமக்கள் இனியாவது வெற்று விளம்பரத்தை விட்டொழித்து விட்டு மின் கம்பங்களை மாற்றுவதிலும், மின் கம்பிகளை உயர்த்துவதிலும், கவனம் செலுத்த வேண்டும் தமிழக அரசு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.