மாநாடு 21 February 2022
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது..இதனை தொடர்ந்து, பிப்ரவரி 22 இல் (நாளை) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 36வது வார்டை சேர்ந்த திமுக, பிரமுகர் துரைப்பாண்டி என்பவருக்கு கவுன்சிலர் சீட் கிடைக்கவில்லை. இதனால் அவரது மனைவி மணிமேகலை சுயேச்சையாக தென்னை மரச் சின்னத்தில் போட்டியிட்டார்.
வேட்பாளர் மணிமேகலை கணவர் துரைபாண்டியுடன் வந்து, தங்களுக்கு ஓட்டு போடும்படி கேட்டுக்கொண்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கிராம் தங்க காசு என 1,500 பேருக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கியவர்களில் பெரும்பாலானோர் மணிமேகலைக்கே ஓட்டு போட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தங்க காசுகளை ஆம்பூர் கஸ்பாவில் உள்ள அடகு கடையில் கொடுத்து பணம் கேட்டதற்கு சோதனை செய்த கடைக்காரர் அனைத்தும் பித்தளை காசு என தெரிவித்துள்ளார். வாக்காளர்களை ஏமாற்றிய மணிமேகலை வெற்றி பெறும் நிலையில் இருப்பதால் அவரது வீட்டுக்கு சென்ற போது மணிமேகலையும், கணவர் துரைபாண்டியும் தலைமறைவாகிவிட்டது தெரிந்திருக்கிறது.
ஓட்டுக்காக போலி தங்க காசு கொடுத்து அப்பகுதி மக்களை ஏமாற்றிய வேட்பாளரை அப்பகுதி மக்கள் தேடி வருகின்றனர்.
இவர்கள் நல்லவர்களாம் வேட்பாளர் தான் இவர்களை ஏமாற்றி விட்டாராம்.