மாநாடு 17 May 2022
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது ஒரு குடும்பத்தின் முறையற்ற ஆட்சி நிர்வாகமே மக்களின் துயரத்திற்கு காரணம் என்று மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி அந்நாட்டின் அதிபராக இருந்த ராஜபக்சேவை பதவி விலக செய்திருக்கிறார்கள்.
பல்வேறு நாடுகளும் பொருளாதார உதவிகளை இலங்கைக்கு செய்து வருகிறது அதேபோல இந்திய அரசு பொருளாதார உதவிகளை செய்கிறது. இப்போதும் கூட இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை.
இதனிடையே தமிழர்கள் மீது 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை நினைவை சுமக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இறுதிப் போர் நடைபெற்ற மாதமான மே மாதத்தை நினைவு கூர்ந்து வருகிறார்கள். அதன்படி இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதிகளுக்கு எந்த ஒரு மருந்து பொருட்களும் கிடைக்காமல் தடை செய்து இருந்தார்கள் அதன் காரணமாக பல உயிர்கள் ரத்தம் சிந்தியே இறந்து போனது என்பது ஊடகங்கள் வாயிலாக உணர்வுள்ள அனைவரும் அறிந்தார்கள். அதுமட்டுமல்லாமல் உணவுப் பொருட்கள் முழுவதுமாக தடை செய்யப்பட்டு இருந்த நேரம் அது.
அந்த நேரத்தில் வெறும் 100 கிராம் அரிசி கிடைத்தால் கூட அதை கஞ்சி காய்ச்சி 10 பேர் குடிக்கும் நிலையில் தான் இருந்தார்கள் .அதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஒரு வாரம் முழுவதும் கஞ்சி வாரமாக அனுசரிக்கப்பட்டு உப்பு ,நீர், அரிசி சேர்த்து கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் வினியோகித்து வருகிறார்கள் இந்த ஆண்டும் மே 18 நாளை நினைவேந்தல் தினம் அதனையொட்டி இப்போது முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கஞ்சி வாரம் அனுசரிக்கப்படுகிறது
மேலும் இலங்கை கொழும்பு பகுதிகளில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிய தொழில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த நேரத்தில் கூட முல்லைத்தீவு, வடகிழக்கு பகுதிகளில் மக்கள் அவ்வளவாக பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது.
கொழும்பு அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் பெட்ரோலுக்காக வாகனங்கள் வரிசை கட்டி இருப்பதை போல இந்தப் பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் மக்கள் அணிவகுப்பு இல்லை என்றும் கூறப்படுகின்றது. அப்படி என்றால் இவர்களை அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி ஏன் பெரிதும் பாதிக்கவில்லை என்கின்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும் அதற்கு விடையாக முன்னாள் அமைச்சர் கந்தையா சிவநேசன் கூறும்போது இந்த பகுதிகளில் வாழ்பவர்கள் மீன்பிடித் தொழிலையும் விவசாயத்தையும் செய்து வாழ்பவர்கள் தான் அதிகம் அதன்படி பார்க்கும்போது இங்கும் எரிபொருள் கிடைக்காத காரணத்தால் மீன்பிடித் தொழிலுக்கு மக்கள் செல்ல முடியவில்லை, அதேபோல உரமும் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை இருந்தபோதும் எங்களின் மண் வளமாக இருப்பதால் வீடுகளிலேயே தங்களுக்கான காய்கறிகளை மக்களே விளைவித்து பயன்படுத்திக்கொள்கிறார்கள அதன் காரணமாக எங்கள் மாவட்ட மக்கள் பொருளாதார நெருக்கடியை அதிகம் உணரப்படவில்லை என்கிறார். இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொரு மக்களும் தெரிந்து, தெளிந்து மனதில் நிறுத்தி வைக்க வேண்டியது எந்த ஒரு மக்களாக இருந்தாலும் பொருளாதார நெருக்கடியில் தாங்கள் சிக்காமல் இருக்க வேண்டுமெனில் காடு வளம், கனிம வளம், நீர் வளம், நிலவளம் காத்து நின்றால் மட்டுமே நம் சந்ததியினர் வளமாக வாழ முடியும் என்பதை உணர வேண்டும்.