மாநாடு 08 January 2023
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சில அமைப்புகள் முனைப்பு காட்டிய போது உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க தமிழ்நாட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக இரவு பகல் பாராமல் போராடியதைப் போல அவர்களும் நம்மோடு சேர்ந்து போராடினார்கள். கடும் போராட்டத்திற்கு பிறகு சல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு நமக்கு அனுமதி கிடைத்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எந்த இடங்களிலும் கூட்டங்கள் சேரக்கூடாது என்ற அறிவுறுத்தல் இருந்ததால் , சல்லிக்கட்டு போட்டியும் பல இடங்களிலும் நடைபெறாமல் இருந்தது.
இந்த ஆண்டு அனைத்து இடங்களிலும் கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில் சல்லிக்கட்டு போட்டியும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெற்று வந்தது, காளைகளும், மாடுபிடி காளையர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இரண்டு முறை பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட காரணத்தை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி சற்று நேரத்திற்கு முன்பு வியாகுல மாதா அடைக்கல அன்னை ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் துவங்கியுள்ளது,
போட்டியை அமைச்சர் ரகுபதி , அமைச்சர் மெய்ய நாதன், ஆட்சியர் கவிதா தொடங்கி வைத்தார்கள். இப்போட்டியில் 500 காளைகளும் , 235 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கிறார்கள். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பாத்திரங்கள், கட்டில்கள், பைக் , இருசக்கர வாகனங்கள், தங்க, வெள்ளி காசுகள், உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்க தயாராக இருக்கிறது. முன்னதாக உறுதிமொழி எடுக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா தலைமையில் 400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.