மாநாடு 20 July 2022
தமிழ்நாட்டில் தவிர்க்கப்பட முடியாத காரணத்தாலும், மத்திய அரசின் அழுத்தத்தாலும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாகவும் அதன் காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இதற்கு பிரதான எதிர்க்கட்சிகளும், திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மேற்கொண்டு நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும், பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பை ஆளும் திமுகவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
அதன்படி சென்னையில் வருகிற ஜூலை 27ஆம் தேதியும் மற்ற மாவட்டங்களில் ஜூலை 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் இவர்கள் தலைமை தாங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் ஓபிஎஸ் க்கு ஆதரவாக இருக்கக்கூடிய பகுதிகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையை அறிவித்திருக்கிறார் இபிஎஸ்.
இதனை தொடர்ந்து அந்தந்த மாவட்டத்திற்கு தலைமை தாங்கும் பட்டியல் வெளியாகும் என தெரிய வருகிறது. ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஊரான தஞ்சாவூரையும், ஓபிஎஸ் ஊரையும் சுற்றியே முதல் பட்டியல் வெளியாகி இருப்பது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவின் மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். அப்போது மத்திய அரசு அதிமுக ஆளும் போதும் எங்களுக்கும் கடிதம் எழுதிக் கொண்டுதான் இருந்தது ஆனால் நாங்கள் மின் கட்டணத்தை உயர்த்த வில்லை உண்மை இப்படி இருக்க இதை ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டி மின் கட்டணத்தை உயர்த்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல போகிற போக்கில் மின் சாதன பொருட்களே யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு போகக்கூடிய சூழலை தான் இந்த திமுக அரசு ஏற்படுத்துகிறது என்றார்.
முதற்கட்டப்பட்டியில் அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி.
திருச்சி மாநகருக்கு அமைப்பு செயலாளர் தங்கமணி.
தேனி மாவட்டத்திற்கு ஆர்.பி.உதயகுமார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு தளவாய் சுந்தரம்.
தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு அமைப்பு செயலாளர் காமராஜ்.
தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு ஓ.எஸ்.மணியனும் தலைமை தாங்குவார்கள் இவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.