மாநாடு 07 January 2023
கடந்த சில ஆண்டுகளாக கண்ணுக்குத் தெரியாத உயிரி கொரோனா என்கின்ற கொடுந்தொற்று நோய் உலகம் முழுவதும் பரவி பல்வேறு ஆளுமைகளையும், ஏழை, பணக்காரர் என்கின்ற வேறுபாடு இல்லாமல் பலரின் உயிரையும் பறித்துக் கொண்டிருந்தது, உலகமே இதிலிருந்து மீண்டு தப்பிப்பதற்காக போராடிக் கொண்டிருந்தது என்பதை அனைவரும் அறிவோம், பெற்ற பிள்ளைகள் கூட பெற்றோர்களை தொட முடியாத அவலமும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பார்க்க முடியாத அவலமும் தொடர்ந்து நடந்து வந்தது,
அந்த நேரத்தில் மருத்துவ செவிலியர்களின் சேவை அனைவராலும் போற்றி பாராட்டப்பட்டு ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வந்தது , அந்நிலையில் தான் இருக்கின்ற செவிலியர்கள் போதாது என்பதால் புதிதாக செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும் என்று திட்டமிட்டு அந்நேரத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக ஒப்பந்த முறையில் செவிலியர்களை பணியமர்த்தியது,
கொரோனாவும் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது , இதனிடையே தமிழ்நாட்டிற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது தேர்தல் பரப்புரையின் போது திமுகவின் தலைவர் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் திமுக ஆட்சி அமைத்தால் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவரும் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார்.
தேர்தல் முடிந்தது , திமுக வெற்றி பெற்றது மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார், திமுக ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டும் விரைவில் முடிய இருக்கிற இந்நேரத்தில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது அதன்படி 31-12-2022 ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் முடிவடைவதால் ஒப்பந்த முறையில் பணியமற்றப்பட்ட செவிலியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, அதனை அடுத்து கொரோனா காலத்தில் தங்கள் இன்னுயிரைப் பற்றி துளியும் கவலை கொள்ளாமல் மக்களின் உயிரை காக்கும் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஒப்பந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிற செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களை தொடர்ந்து போராடவும் விடாமல் காவலர்கள் கலைத்து வெளியேற்றினார்கள், இருந்த போதும் செவிலியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் அவர்களுக்கு பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகிறது,
இந்நிலையில் சென்னை எழும்பூரில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களை சந்தித்தவர் கூறியதாவது: மாவட்ட பெருநகரங்களில் மட்டுமே ஒப்பந்த முறையில் பணி அமர்த்தப்பட்ட செவிலியர்கள் இதுவரை பணியாற்றி வந்தார்கள். இவர்களுக்கு இதுவரை 14 ஆயிரம் ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது, தற்போது 2300 செவிலியர்களையும் பணியில் அமர்த்துவதற்காக வேலைகள் நடந்து வருகிறது, அதனடிப்படையில் ஒப்பந்த முறையில், வெளியூர்களில் பணியாற்றி வந்த செவிலியர்கள் இனி சொந்த ஊர்களில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது என்றும் அவர்களின் ஊதியம் 19 ஆயிரம் ஆக இருக்கும் என்றும் கூறிய அமைச்சர் இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது என்பதையும் தெரிவித்தார்.