திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்துரை சேர்ந்த 19 வயது மாணவி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பாய்லர் ஆலை பகுதியில் மணியம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு தினமும் சென்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 17 ம் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் சாப்பிட்ட உணவில் விஷம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில், பாய்லர் ஆலை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாய்லர் ஆலை காவலர்கள் மருத்துவமனைக்கு சென்று, அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர்.

அந்த மாணவி காவலர்களிடம் இவ்வாறு கூறியிருக்கிறார் கடந்த ஒரு மாதமாக தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வந்ததாகவும், கடந்த 11ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அந்த நபர் தன்னிடம் காதலிப்பதாக கூறியதாகவும், இதனால் அவரை தான் செருப்பால் அடித்து விட்டதாகவும் இதையடுத்து கடந்த 12 ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது தன்னை காதலிப்பதாக கூறிய நபர் உள்பட 3 வாலிபர்கள் சேர்ந்து தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகில் உள்ள ஒரு சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 13ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு அதிகமானதால் கடந்த 17ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும், அந்த மாணவி வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து பாய்லர் ஆலை காவல்துறையினர் வழக்குப்பதிந்து 3 பேரை தேடி வந்த நிலையில், ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். இந்நிலையில் மாணவி தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மாணவியின் தாயார் கூறுகையில் கடந்த 18ஆம் தேதி புகார் அளித்ததாகவும் மாணவியின் இறப்புக்கு காரணமான மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக கூறி காவலர்களை கண்டித்து உடலை வாங்க மறுத்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக திருச்சி ,தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவலர்கள் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்களிடம் காவலர்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் .இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.