மாநாடு 13 April 2022
தனது 14 வயதில் பாட்டை எழுதத் தொடங்கி பாமரர்கள் படும்பாட்டை பாட்டுக்குள் அடைத்து பட்டிதொட்டியெல்லாம் பரவ விட்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்தநாள் இன்று.
ஒரு வார்த்தை கொல்லவும் வைக்கும் ஒரு வார்த்தை வெல்லவும் வைக்கும் என்ற சொல்லுக்கேற்ப இவரது பாடல் வரிகள் ஒவ்வொன்றும் கேட்பவர்களின் உள்ளத்தை இல்லம்மாக்கி இயலாமை என்ற செயலை போக்கி இவ்வுலகில் மனிதனாக வாழ வழி சொல்லும் மாமருந்து.
ஓங்கி வளரும் மூங்கில் மரம் ஒன்னை ஒன்னு புடிச்சிருக்கு ஒழுங்கா குருத்துவிட்டு கெளைகெளையா வெடிச்சிருக்கு ஒட்டாம ஒதுங்கி நின்னா உயர முடியுமா எதிலும் ஒற்றுமை கலைஞ்சதுன்னா வளர முடியுமா? போன்ற பாடல் வரிகள் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை சொல்வதாக இருக்கும்.
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தால் அது திரும்பவும் வராம பாத்துக்கோ என்கிற பாடல் வரிகள் தவறு செய்துவிடக்கூடாது அப்படி தெரியாமல் தவறு செய்து விட்டாலும் மனம் திருந்தி திரும்ப அதே தவறை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்குகிற வரிகள் இவை.
தானா எவனும் கெட மாட்டான் தடிக்கிவிடாமல் விழமாட்டான் போனா எவனும் வரமாட்டான் இதை புரிஞ்சுகிட்டவன் அழ மாட்டான் என்கிற பாடல் வரிகள்
சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு ஏசுவும் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க எல்லாம்தான் படிச்சீங்க என்னா பண்ணி கிழிச்சீங்க என்கிற வரிகளில் இன்றைக்கு படித்த அதிமேதாவிகள் என்று தங்களைத் தாங்களே நினைத்துக்கொண்டு சமூகத்தைப் பற்றியும் சுற்றியிருக்கும் சுற்றுச்சூழலைப் பற்றியும் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் இருப்பவர்களை பற்றி அன்றே அவர் பாடல் வரிகளில் வைத்துள்ளது போல இருக்கிறது.
கடந்த சில நாட்களாக தமிழ் கனெக்ட் என்று ட்வீட் செய்து தமிழே தொடர்பு மொழி தான் என்று உலகிற்கு உணர்த்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறோம் ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அந்த காலகட்டத்திலேயே இவ்வாறு தனது பாடல் வரிகளில் சொல்லியிருக்கிறார் தாயால் வளர்ந்தேன் தமிழால் அறிவு பெற்றேன் நாயே நேற்று உன்னை நடுத்தெருவில் சந்தித்தேன் நீ யார் என்னை நில் என்று சொல்வதற்கு. இப்படி எந்த பாடல்கள் எடுத்தாலும் இவ்வுலகம் உள்ளவரை எல்லாருக்கும் எல்லா நேரத்திற்கும் பயன்படுபவை இவரது படைப்புகள் .
இவரின் பிறந்த நாளான இன்று மக்கள் கவிஞருக்கு மாநாடு இதழ் புகழ் வணக்கம் செலுத்தி வணங்குகிறது.