மாநாடு 21 July 2023
பேராவூரணி ஜூலை 21
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பறை வழங்கிய முன்னாள் மாணவருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கே.சி.துரைமுருகன். பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர், உடுமலைப்பேட்டை பகுதியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனது தந்தையான பேராவூரணி மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் மறைந்த கே.சிதம்பரம் நினைவாக, தான் படித்த, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பறையை வழங்கினார்.
இதன் துவக்க விழா நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் கே.சோழ பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைமையாசிரியர் சி.முதல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொழிலதிபர் கே.சி.துரைமுருகன், ரிப்பன் வெட்டி, ஸ்மார்ட் வகுப்பறையைத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பி.மணிவாசகம், தஞ்சாவூர் மோகன் குமார், உடுமலைப்பேட்டை ராஜ்குமார், பேராவூரணி வர்த்தக சங்க துணைத் தலைவர் கௌதமன், பாலசுப்பிரமணியன், முருகானந்தம், மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சாரண இயக்க அமைப்பாளர் முத்துசாமி தலைமையில், சாரண மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர், நன்கொடையாளர் கே.சி.துரைமுருகனுக்கு நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் த.நீலகண்டன்