மாநாடு 21 July 2023
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணி நடைபெற்றது.
இதில், ஆட்சியர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்டு பேசுகையில், “ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை வீடு, வீடாகச் சென்று, 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியாகும் நபர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட வேண்டும்.
அதேபோன்று தகுதி இல்லாத நபர்களை பெயர் நீக்கம் செய்திட வேண்டும். ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், வீடு, வீடாக சென்று குறிப்பிட்ட பணிகளை 100 விழுக்காடு முழுமையாக முடிக்க வேண்டும். அதேபோல கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக பயனாளிகள் பெயர் விடுபடாமல் இணைக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம், இ – சேவை மையம், கணினி அறை உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அங்கு வந்திருந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் மற்றும் பூக்கொல்லை பகுதியில், நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான இடத்தையும் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி, வட்டாட்சியர் த.சுகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மணி, தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணகி மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய் துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் த.நீலகண்டன்