மாநாடு 22 January 2023
சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் மக்களை நக்கல் செய்கிறதா இந்த அரசு என்று அனைவருக்கும் தோன்றும் படி ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறது இந்த அரசு.
தமிழை வளர்ப்போம், தமிழ் மானத்தை காப்போம் என்று தமிழை வளர்க்க நிதிகள் ஒதுக்கப்படுகிறது, ஆனால் திமுக அரசே நம்ம Thanjavur, நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்,
என்று தமிங்கிலத்தை பயன்படுத்தி, தமிழில் திரிபை ஏற்படுத்தி தமிழை சிதைக்கிறது இந்த அரசு.
போதையில்லா தமிழகத்தை உண்டாக்குவது இலக்கு என்கிறது , விழா காலங்களில் டாஸ்மாக் போதை பொருட்களை விற்கவும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
காசு கொடுத்தாலும் கரெக்டான நேரத்திற்கு எங்க ஊருக்கு பஸ் வந்துச்சு தம்பி, காசு எல்லாம் தேவையில்லை மகளிர்க்கு இலவசம் என்று திமுக அறிவித்தது அன்று முதல் எங்களுக்கு மரியாதையும் குறைந்தது, மணிக்கு வரவேண்டிய பேருந்தும் வரவில்லை என்று மகளிர்களும் கோபத்தோடு கூறுகிறார்கள், இயக்கப்படும் பேருந்துக்களின் எண்ணிக்கைகளும், குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் நாள்தோறும் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள் தமிழக மக்கள்.
அதன்படி இன்று தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் வரை இருசக்கர வாகனத்தில் சென்று சராசரியாக மக்களின் வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய முற்பட்டு புறப்பட்டோம்.
தஞ்சாவூரில் இருந்தே எங்கு பார்த்தாலும் கும்பல் கும்பலாக காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள், பல இடங்களிலும் வாகன சோதனைகளும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது, கரந்தை பள்ளியக்கரகாரம் பிரிவு சாலை தாண்டி கொஞ்ச தூரத்திலிருந்தே நெடார் வரை இருசக்கர வாகனத்தில் நாம் பயணிக்கும் போது சாலையில் செல்கிறோமா அல்லது சபரிமலையில் செல்கிறோமா என்று நினைக்கும் அளவிற்கு கற்கள் கண்டமேனிக்கு பரப்பப்பட்டு, கற்களே முற்களைப் போல சாலைகளில் நீட்டி கொண்டிருந்திருந்தது, தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் துரிதமாகவும், தரமாகவும் சாலைகள் போடக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், வெகு நாட்களாக சாலை போடும் பணியினை மேற்கொண்டு மக்களை துன்பப்படுத்தும் செயலுக்கான காரணத்தை புரிந்தவர்கள் அறிவார்கள்.
மக்களுக்கு நோய் தொற்று உண்டாகாதவாறு காப்பதற்காக அரசின் சார்பில் நிதிகள் ஒதுக்கப்படுகிறது , அதனைக் கொண்டு சிற்றூர்கள் முதல் மாநகராட்சிகள் வரை குப்பைகள் சேர்ந்து கிடக்காமலும், சாக்கடைகள் தேங்கி நிற்காமல் இருந்தாலே பெரும்பாலான நோய்கள் உண்டாகுவதை தடுக்கலாம் ஆனால் தஞ்சாவூர் சிறந்த மாநகராட்சி என்கிற போதிலும் பல்வேறு இடங்களிலும் குப்பைகள் சேர்ந்து கிடப்பதையும், சாக்கடைகள் தேங்கி கொசுக்கள் உருவாகி நிற்பதையும் காண முடிகிறதல்லவா.
அதேபோலவே கும்பகோணம் சாலையிலும் பல ஊர்களிலும், பல இடங்களிலும் காண முடிந்தது, குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் பசுபதி கோவில் அருகே
பள்ளிக்கூடங்கள் நிரம்பி இருக்கின்ற பொதுமக்கள் அதிகம் நடமாடுகின்ற பகுதியான அய்யம்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் நோய் தொற்று ஏற்படுத்தும் விதமாக குப்பைகள் சேர்ந்து கிடந்தது, அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் என்ன செய்கிறது ?
அதனைத் தொடர்ந்து அய்யம்பேட்டையில் இருந்து கொஞ்ச தூரம் நமது வாகனம் சென்றது எங்கு பார்த்தாலும் அங்கும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள், பெண் காவலர் ஒருவர் கையில் இட்லியை வைத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அவரை நெருங்கி ஏன் அக்கா காவலர்கள் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சாதாரணமாக பேச்சு கொடுத்தோம், பாதுகாப்பு கொடுப்பதற்காக நிற்கிறோம் என்றார், அவரைக் கடந்து குண்டும், குழியுமாக இருக்கின்ற
சாலையில் பெரும் பள்ளங்களில் இருந்து தப்பித்து , சாலையைத் தேடிப் பிடித்து கும்பகோணத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். பல இடங்களிலும் மக்களுக்கு விபத்து ஏற்படுத்துகின்ற வகையில் சாலைகளில் பெரும் பள்ளங்கள் இருந்தன,
தாராசுரம் புறவழிச் சாலை பிரியும் இடத்தில் பெரும் அளவில் காவலர்கள் நின்று கொண்டு இரு பக்கங்களில் இருந்து வருகின்ற இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை என்கிற போதிலும் தின கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்களின் இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டது,
அவர்களிடமும் தலையில் ஏன் ஹெல்மெட் போட்டு வரவில்லை என்று கேள்வி எழுப்பிய காவலர்கள் சாலையின் ஓரத்தில் அவர்களை எல்லாரையும் நிற்க வைத்தார்கள், அங்கிருந்த காவலரிடம் நாம் சென்று தகவலைக் கேட்டு விட்டு அங்கிருந்தவர்களையும் அவர்களோடு சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டு
ரோட்டில் ஹெல்மெட் போடாமல் வருபவர்களுக்கு அபராதம் போட சட்டத்தில் இடம் இருப்பதை போல , ஓட்டை வாங்கிக்கொண்டு ரோட்டை கூட சரியான நேரத்தில் தரமாக போடாமல் இருப்பவர்களிடம் அபராதம் போட சட்டத்தில் இடம் இருக்கிறதா என்கிற கேள்வியோடு கும்பகோணம் சென்றடைந்தோம்.