மாநாடு 16 April 2022
ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் பக்திப் பெருக்கோடு கூடிக் கொண்டாடும் பெருவிழாவாக நடைபெறும் கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.அப்போது,ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பதும்,மற்றொருவரான 60 வயது மூதாட்டி யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் காயமடைந்துள்ளனர் அவர்களும் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.இதனைத் தொடர்ந்து,நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களின் விவரங்களை அறிய 9498042434 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில்,வைகை ஆற்றில் இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
மேலும்,காயமடைந்த 11 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாகவும்,அவர்களின் முழு சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்பதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்
