மாநாடு 10 January 2023
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் வெட்டாற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வந்த 3 மாட்டு வண்டிகளும், நடுக்காவேரி காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு நடுக்காவேரி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மணல் ஏற்றி வந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சுற்றி மணல் குவாரிகள் இயங்கி வருகிறது, அதில் அரசு அனுமதி கொடுத்த அளவை விடவும் அதிகமாக மணல் ஏற்றப்படுவதாகவும், இது அனைவருக்கும் தெரிந்திருந்தும், கவனிக்க வேண்டியவர்களை முறையாக கவனித்துக் கொள்வதால் கண்டு கொள்ளாமல் விடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் புதிதாக கண்டியூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு வயல் வழியாக அமைக்கப்படும் சாலையே, போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி , மணல் கடத்துவதற்காக தான் என்று கூறி தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் போராடி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் திருவையாறு அருகே உள்ள பாப்பாக்குளம் பகுதியில் ராஜேந்திரன் சாலையில் அம்மன்பேட்டையை சேர்ந்த 20 வயதுடைய கிறிஸ்டோபர், 35 வயது உடைய இளையராஜா, 46 வயது உடைய பெஞ்சமின், உள்ளிட்ட 3 பேரும் வெண்ணாற்றிலிருந்து, 3 மாட்டு வண்டிகளில் தனித்தனியே அரசின் அனுமதி இல்லாமல் ஆற்று மணலை ஏற்றி வந்ததாகவும், அப்போது ராஜேந்திரன் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நடுக்காவேரி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் வேலாயுதம் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் இவர்களின் மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தினார்களாம், அப்போது மணல் ஏற்றி வந்த சம்பந்தப்பட்ட 3 பேரும் மாட்டு வண்டியை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்களாம், காவலர்கள் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து நடுக்காவேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்திருக்கிறார்களாம், தப்பி ஓடிய 3 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.