மாநாடு 6 August 2022
வருகிற 11-ம் தேதி மது ஒழிப்பு தினம் அதனை முன்னிட்டு மிகவும் அக்கறையுடன் இளைய சமுதாயத்தை சரியாக வழி நடத்த வேண்டும் என்று உளமாற நினைத்து திமுகவின் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் போதைப் பொருளை அழித்து இளைஞர்களை காக்க கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் இளையசமுதாயத்தின் எதிர்காலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருட்களின் பாதிப்புகள் பற்றி உங்களின் கவனத்தை ஈர்க்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். சமூகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிப்பதற்கு உறுதியேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளிக்கவேண்டும். போதைப் பாதையானது அழிவுப்பாதை என்பதை நாடும், நாட்டுமக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறார்கள்.
போதைப்பொருட்கள் அவர்களுடைய சிந்தனையை அழித்து விடுகிறது. அதுமட்டுமின்றி வளர்ச்சியைத் தடுத்துவிடுகிறது. அத்துடன் எதிர்காலத்தைப் பாழாக்கி அவர்களது குடும்பத்தையும் அழித்துவிடுகிறது. ஆகவே இது நாட்டின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு டாஸ்மாக்கில் விற்பது போதை பொருள் தான் என்பதை எந்த சட்டமன்ற உறுப்பினராவது நமது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துச் சொல்லிவிட்டால் அடுத்த நொடியே இளைஞர்களை காக்க உடனடியாக டாஸ்மாக்கை இழுத்து முழுவதுமாக மூடிவிட உத்தரவிடுவார் எந்த சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்களை காக்க போகிறார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.
வீடியோவை பார்க்க இதைத் தொடவும்:https://youtu.be/3xl0r9RUIeI