மாநாடு 27 March 2022
சேலம் மாவட்டத்திலுள்ள தச்சன்காடு பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தனபால் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது நாமக்கல், மேச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 1ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த தனபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை பெருமாள் தொளசம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனபாலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தனபால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் தனபாலின் தந்தை பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது குடிபோதையில் வீட்டிற்கு வந்த தனபால் தனது தந்தையை தாக்கி தகராறு செய்துள்ளார்.
அந்த நேரம் தனபாலின் அக்கா மகன் சரண்ராஜ் என்பவர் தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் தகராறு செய்த தனபாலை பெருமாள் தனது பேரனுடன் சேர்ந்து தாக்கி கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது