மாநாடு 05 January 2023
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கடம்பங்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல். இவர் கடந்த ஜூன் மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் தனது மனைவியை அடித்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
உறவினர்கள் யாரும் தன்னை பிணையில் வெளியே எடுக்க வில்லை என்று கோபத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பிணையில் வெளியே வந்தவர் ஏன் என்னை பிணையில் வெளியே எடுக்கவில்லை என்று கேட்டு உறவினர்களோடு தகராறில் ஈடுபட்டிருக்கிறார், என்னை பிணை எடுக்காததற்கு காரணம் அண்ணன் மகன் வினோத் தான் என்றும் தன் மனைவியை கொலை செய்தது போல உங்களையும் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஓர்க்குடி சிற்றாற்று பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த சிங்காரவேலை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்ததாக கீழ்வேளூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள், அதன் அடிப்படையில் சிங்காரவேலுவின் அண்ணன் மகன்
வினோத் மற்றும் அவனது நண்பர்களான கருணாகரன், ரவீந்திரன் , வினோகரன், மனோஜ், தாமோதரன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து காவலர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்திருக்கிறது,
என்னவெனில் சிங்காரவேல் தனது மனைவியை கொலை செய்தது போல உங்களையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியதில் பயந்து போன வினோத் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சிங்காரவேலுவை தனது நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகள் 6 பேரையும் காவலர்கள் நீதிமன்றத்தில் இன்று நேர் நிறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.