Spread the love

மாநாடு 10 April 2022

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்ரா பவுர்ணமியை யொட்டி விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தேரோட்டம், மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவும் நடைபெறும்.

இதில் பழமை வாய்ந்த விக்கிரம சோழீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு,1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாட்டுச்சந்தையும் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக மாட்டுச் சந்தை நடைபெறவில்லை.

இரண்டு ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு திருவிழா கடந்த வெள்ளியன்று துவங்கியது. இதனை ஒட்டி கடந்த ஞாயிறு முதல் மாட்டுச் சந்தையும் கூடியது. இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், அவர்களுக்கு தேவையான வகை மாடுகளை வாங்கியும் செல்வார்கள்.

இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. 16 ஆம் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோயில் சித்தரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

பத்தாம் நூற்றாண்டில் (1088) அபிமான சோழ ராசாத்திராசனால் விக்கிரம சோழீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு,வீர ராசேந்திர சோழனால் இக்கோயிலுக்கு கொடை வழங்கப்பட்டும், உழவர்கள், வணிகர்களுக்கு வரி விதிக்கப்பட்டு, விக்கிரம சோழீஸ்வரர் கோயில் தைப்பூச விழாவும், தினப்பூசைகளும்,இதரதிருவிழாவும் நடந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலில் உள்ள முருக கடவுள் ஆறு முகங்களுடன்‌ காட்சி தருவது சிறப்பாகும்.

சேரர்களின் முசிறி (கேரளா) துறைமுகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் பெருவழிப்பாதையில் அமைந்துள்ள இக்கோயிலின் மாட்டுச் சந்தை 1000 ஆண்டுகள் பழமையானதாகும்.

கொரோனாவுக்கு பின் இந்த ஆண்டு முன்னதாகவே மாட்டுச்சந்தை கூடத் தொடங்கி விட்டது. இந்த மாட்டுச் சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் நாட்டு மாடு, கன்று , பல்வேறு வகையான காளைகளை வாங்கிச் செல்கிறார்கள்.

நாட்டு இன மாடுகளான காங்கயம்,கிர்,காங்கரேஜ் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன. நாட்டு மாடுகளுக்கு என கடந்த 1000 ஆண்டுகளாக நடைபெறும் ஒரே சந்தை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்று வரும் மாட்டுச் சந்தையை காண பொது மக்கள், விவசாயிகள் பலரும் குடும்பமாக வந்து செல்கின்றனர். இங்கு இளங்கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடுகள் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும், சோடி காளைகள் 80 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரையும், இனவிருத்திக்காளைகள் 1 லட்சம் வரையும் விற்பனைக்கு வந்துள்ளன.

இச்சந்தையை ஒட்டி கோயிலின் முன்பாக மாடுகளுக்கான கயிறுகள்‌,மணிகள், குஞ்சம், சாட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

29840cookie-checkஇத்தனை வகை நாட்டு மாடுகள் இந்த விலை அதிசயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!