ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.இதனை தனது 07-05-2014 தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.
ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு செயல்படுவதன் காரணமாக அணுகு சாலையை சரி செய்யவோ அல்லது அங்குள்ள மரங்களை வெட்டவோ முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் மனுத்தாக்கல் செய்திருப்பது நியாயமற்றது.எனினும் மத்திய நீர்வள ஆணையத்தின் மனுத்தாக்கலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டிய கடமையும்,பொறுப்பும் தமிழக அரசிற்கு உள்ளது.எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத்தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
பேபி அணை மற்றும் அணைப்பகுதிகளை வலுப்படுத்தும் வகையில் மரங்களை வெட்ட அனுமதி வழங்குமாறு கேரள அரசிற்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.தமிழக அரசின் சார்பில் திறமையான வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய நீர்வள ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மறுஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மாநில உரிமை பிரச்சினையில் இவ்வாறு சேர்ந்து செயல்படுவது போற்றுதலுக்குரியது .