மாநாடு 12 April 2022
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதி காப்பன் தெரு. இங்கு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களது நீண்ட வருட கோரிக்கையாக கழிவுநீர் வடிகால் வசதி வேண்டும் என்று கேட்டு பல வகையான நூதன போராட்டம் நடத்தி வந்ததாகவும், 2016ஆம் ஆண்டு செயல் அலுவலராக மனோகரன் இருந்த போது இந்த பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் இறங்கப் போவதாக அறிவித்து இருந்ததாகவும் அதன்பிறகு சம்மந்தப்பட்ட காப்பன் தெருவிற்கு வந்த அதிகாரி மனோகரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாக்கடை அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டதாக கூறுகிறார்கள்.
ஆனால் இதுவரை இந்த மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும் இந்தப் பகுதியின் குறைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நமது மாநாடு இதழுக்கு வேண்டுகோள் வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியின் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர் துரைமுருகனிடம் இதைப்பற்றி பேசினோம் அதற்கு அவர் கூறியதாவது:
நான் பதவியேற்று ஏறக்குறைய ஒரு மாத காலம் தான் ஆகிறது.நடைபெற்ற முதல் கூட்டத் தொடரிலேயே மக்களுக்கு நான் கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக பல்வேறு கோரிக்கைகளை பேரூராட்சி கூட்டத்தொடரில் எடுத்து வைத்திருக்கிறேன்.அது பரிசீலனையில் இருக்கின்றது.இந்த பகுதியில் மக்கள் சுட்டிக்காட்டியுள்ள குறையும் உறுதியாக நிவர்த்தி செய்து தரப்படும் அதுமட்டுமல்லாமல் நான் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
பாபநாசம் பேரூராட்சியில் தற்போதைய செயல் அலுவலர் கார்த்திகேயனிடம் பேசுவதற்காக தொடர்புகொண்டோம் அவர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருப்பதாகவும் அவரது அலைபேசியை அலுவலக உதவியாளர் வைத்திருப்பதாகவும் கூறி உதவியாளர் பேசினார். நாம் இந்தத் தகவலை உங்கள் அதிகாரியிடம் சொல்ல முடியுமா எனக் கேட்டோம் அதற்கு உறுதியாக கூறுகிறேன் என்றார். மக்களின் கோரிக்கையை உதவியாளரிடம் கூறினோம் கேட்டுக் கொண்டு கூறியதாவது:
சார் வந்தவுடன் இந்த செய்தியை தெரிவிப்பதாகவும் அதேவேளை அந்த பகுதிகளில் மட்டுமல்லாமல் பாபநாசம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையுமே நன்கு பராமரித்து வருகிறோம் சாலைகள் போட்டு வருகிறோம் குப்பைகளை அகற்றி வருகிறோம் உதாரணத்திற்கு அன்னக்குடி வாய்க்காலை சீர் செய்துள்ளோம் எனவே இந்த பகுதியில் மக்கள் கூறப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் பிரச்சனையையும் உறுதியாக சரி செய்து விடுவோம் என கூறினார்.
மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம்.
செய்தி:ராஜராஜன்