மாநாடு 3 April 2022
தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வாறான பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் 18 நாள் திருவிழாவாக பன்னெடுங் காலமாக நடந்து வருகிறது.இந்தக் கோயில் எந்த வகையில் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஒவ்வொரு முறையும் வெளிக்கொணர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்தப் பெருமை இந்த மண்ணில் பிறந்த பல தமிழர்களுக்கு தெரியாமலும் அறியாமலும் இருந்தாலும் கூட உலகில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.
தமிழரின் மானத்தையும் உலகத்தில் தமிழர்களுக்கும் ,தமிழுக்கும் ,தலை நிமிர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தஞ்சை பெரியகோயிலின் புகழை மட்டுமல்ல அதன் பெயரையும் அதன் அடையாளங்களையும் மாற்றியமைப்பதற்கு பலவழிகளில் தொடர்ந்து வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பெரியகோயிலின் பெயர் பலகை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று எழுதி திடீரென ஒரு நாள் 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வைத்து விட்டார்கள்.
தமிழர்களின் கோயிலுக்கு சமஸ்கிருதப் பெயர் எதற்கு என்று பெரிய கோயில் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா.பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் பல்வேறு இயக்கங்களும் நாம் தமிழர் கட்சியும் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.
அதன் விளைவாக பெரும் போராட்டங்களுக்குப் பிறகு மார்ச் மாதம் 31ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு மீண்டும் பெரிய கோயில் என்ற பெயர் பலகையை கோவிலின் வெளியே வைக்கப்பட்டது இதன் மூலம் அந்த இடத்தில் இருந்த பிரகதீஸ்வரர் கோயில் என்கிற பெயர் பலகை அகற்றப்பட்டது.இது ஒரே நாளில் நடக்கவில்லை தொடர் போராட்டங்கள் மூலம்தான் இதை நிகழ்த்திக் காட்ட முடிந்தது.
இவ்வாறு இருக்கும்போது கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பெரியகோயிலின் சித்திரை திருவிழாவும் தேரோட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு வழக்கம் போல பெரிய கோயிலின் திருவிழாவானது மார்ச் மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு 18 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் தேரோட்டம் ராஜ வீதிகளில் இந்த ஆண்டு மிக சிறப்பாக நடைபெறுவதற்கு ராஜ வீதிகளில் ஆக்கிரமித்து வைத்திருந்த இடங்களையெல்லாம் அகற்றி மீட்கும் பெரும் பணியை திறம்பட சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார் தஞ்சை மாநகராட்சியின் ஆணையர் சரவணகுமார்.
பெரியகோயிலின் தேரோட்டம் வருகிற 13-4-2022 புதன்கிழமை நடைபெறவுள்ளது. அதன் காரணமாக தஞ்சாவூர் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் செய்தி ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.அந்த அறிக்கையில் மார்ச் மாதம் 13ஆம் தேதி தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வானது எதேச்சையாக கூட நடந்திருக்கலாம் இருந்தாலும் தமிழனின் கோவிலுக்கு மீண்டும் தமிழ் பெயரில் பலகை வைப்பதற்காக போராடிய போராட்டமும் அலைந்த அலைச்சலும் சொல்லில் அடக்க முடியாதது.இதனை உணர்ந்து இனிவரும் காலங்களில் பெரியகோயிலின் இயற்பெயரான பெருவுடையார் திருக்கோயில் என்றோ அல்லது உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும் வகையில் இருக்கும் பெரியகோயில் என்று மட்டுமே குறிப்பிடவேண்டும் அழைக்கவேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள்.
இப்போது பெரிய கோயில் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய கோயிலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கோயில் கோபுரங்களுக்கும், சுவர்களுக்கும், மின் வளக்குகள் போட்டு அலங்கரித்து வைத்திருக்கும் நிர்வாகம்.கோயிலின் வெளியே முகப்பு பகுதியில் தஞ்சை பெரிய கோயில் என்று இருக்கின்ற பெயர் பலகையில் எந்தவித வெளிச்சமும் போடாமல்
அந்த பெயர் பலகையை இருட்டடிப்பு செய்யும் விதமாக இருளாக வைத்திருப்பதை உடனடியாக மின் விளக்கு போட்டு அந்த பலகையை மிளிர வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வாய்ப்பு உள்ளவர்கள் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்ப்போம் அல்லது சிறுமை படுத்தாமலாவது இருப்போம். இதுவே நம்மை சுமக்கும் தமிழ் மண்ணுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
இப்போதாவது போராட்டம் இல்லாமல் இருட்டடிப்பை நீக்கு வார்களா ?
சற்று பொறுத்திருந்து பார்ப்போம். செய்தி :க.இராம்குமார்.