மாநாடு 11 February 2022
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக சாலை அமைப்பது,பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது என்று தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகளின்போது பல சமயத்தில் அவசர கோலத்தில் சாலைகள் அமைக்கப்படுவதால் அவை அமைக்கப்பட்ட சில வாரங்கள் அல்லது மாதங்களிலேயே கண்டமாகி, குண்டும் குழியுமாகி விடுகின்றன. சாலைகள் போடும்போதே தரமற்றதாக போடுவதால், விரைவிலேயே அவைகள் சேதமடைவதுடன்,வாகன ஓட்டிகள் உயிரிழப்புகளுக்கும் ஆளாகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் ஒன்றை அண்மையில் எழுதியிருந்தார்.அதில், மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதியில் புதிதாக சாலையை அமைக்கும் போதும், சீரமைக்கும் போதும் பழைய சாலையின் மேற்பரப்பை முழுவதும் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு புதிதாக சாலையை அமைக்க வேண்டும்.சாலை அமைக்கும்போது உரிய நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும் அறிவுறுத்தியிருந்தார்.
இறையன்பு உத்தரவுக்கு
பின்னும்,அவரே நேரில் சென்று பல இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகும்,பழையபடியே சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதாவது,பழைய சாலைகளின் பேற்பரப்பை சுரண்டி எடுக்காமல் அதன் மீதே புதிய சாலைகள் போடப்படுகின்றன. இதனால், ஏற்கனவே இருக்கும் சாலையில் மட்டத்தினை விட புதிய சாலையின் உயரம் அதிகரிப்பதால் அவற்றின் தரமும், உழைப்பும் குறைகிறது. சாலையையொட்டி அமைந்துள்ள வீடுகளின் உயரம் தாழ்வதால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்படுகிறது.
தலைமைச்செயலாளார் உத்தரவுக்கு பின்னர்,பழைய தார் மற்றும் கான்கரீட் சாலைகளை உடைத்து எடுத்து விட்டு புதிய சாலைகளை போட துவங்கி உள்ளார்கள். ஆனாலும் சில பகுதிகளில் மக்கள் கவனிக்காத பட்சத்தில் பழைய சாலை மீது புதிய சாலையை இரவோடு இரவாக போட்டு விடுவதாக குற்றம் சாட்டப்பாடுகிறது.
அதுதவிர இதன் பின்னால் கோடிக்கணக்கில் ஊழலும் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தொகையில், அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுக்கப்படுவதால் அவர்களும் ஒப்பந்ததாரர்களை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தலைமை செயலாளர் இறையன்புவின் காதுகளுக்கு சென்றுள்ளதாக கூறுகின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சாலை பணிகள் தொடர்பாக அவர் பல முறை அறிவுறுத்தியும், நேரில் சென்று பார்வையிட்டும் முறைகேடுகள் நின்றபாடில்லை. நீதிமன்றமும், முதல்வரும் இதுதொடர்பாக ஏற்கனவேஎ அறிவுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் முதல்வரின் கவனத்துக்கு இந்த விஷயம் சென்றால் என்னாவது என இறையன்பு கடுமையான டென்ஷனில் இருக்கிறார். விரைவில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.