மாநாடு 15 December 2022
பணம் கொடுத்தால் எதில் வேண்டுமென்றாலும் நடிக்கும் நடிகர்கள் இருக்கும் நம் தமிழ் திரை உலகில் தான் சத்தியத்தையும், தர்மத்தையும் காக்க, சக மனிதர்களுக்கு துயர் என்றால் பதறி துடிக்க, சமகாலத்தில் இருக்கும் பிரபலங்களில் முதன்மையானவர்களில் முக்கியமானவர் திரைப்பட நடிகர் ராஜ்கிரண், இன்று அவர் முகநூல் பதிவில் ஆன்லைன் ரம்மி சமூகத்துக்கு நல்லதல்ல சூதாட்டம் எந்த வகையில் வந்தாலும் ஏற்புடையதல்ல என்பதை அந்த காலத்திலேயே தன் திரைப்படங்கள் மூலம் எடுத்துரைத்ததையும், சமூகம் இதனால் சீர்கெட்டு விடும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கின்ற அக்கறையில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருந்தார் அதனை அப்படியே பதிவிடுகிறோம் .
“சீட்டாட்டம்” என்பது,
மிக மிக மோசமான சூது.
சீட்டாட்டத்தினால்
தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்…
சீட்டாட்டத்தினால் ஏற்படும்
வெறியும், போதை போன்ற மயக்கமும்
அந்தப்பழக்கத்தை தொட்டவரை
விடவே விடாது…
சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக
எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு
தயங்கமாட்டார்கள்,
அதற்கு அடிமையானவர்கள்…
இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான்,
“எல்லாமே என் ராசா தான்”
என்று, ஒரு படமே எடுத்தேன்…
அந்தக்காலகட்டங்களில்
சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது.
“காவல் துறை கைது செய்தால்
கேவலமாகிவிடுமே” என்ற பயமும் இருந்தது.
ஆனால், இப்போது
சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி,
“ஆன்லைன் ரம்மி” என்ற பெயரில்,
காவல் துறையைப்பற்றிய பயமில்லாமல்,
எல்லோரும் ஆடலாம் என்றாகி,
இந்த சமூக சீர்கேட்டிற்கு,
பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை,
ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு,
கூவிக்கூவி அழைத்துக்கொண்டே
இருக்கிறார்கள்.
இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும்
37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன…
37 குடும்பங்கள் பரிதவித்துக்கிடக்கின்றன.
தமிழக அரசு,
இந்த நாசகார, உயிரோடு
விளையாடும் விளையாட்டைத்தடுக்க
சட்டம் இயற்றியும், அதை செயல் படுத்த
முடியாமல், முட்டுக்கட்டைகள்
போடப்படுகின்றன…
தன்னிச்சையாக இந்தப்பிரச்சினையை
கையிலெடுத்து, இந்த உயிர்பலி
விளையாட்டை தடை செய்து, பொதுமக்களை
காக்க வேண்டிய நீதி மன்றங்கள்,
இது, திறன் மேம்பாட்டு விளையாட்டு
என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது,
இல்லையெனில், இது அதிர்ஷ்டத்தை
மட்டுமே அடிப்படையாகக்கொண்ட,
மக்களை ஏமாற்றும் சூது தான் என்பதை
நிரூபியுங்கள் என்று கூறுவதாக,
செய்திகள் வருகின்றன…
இது, எதில் போய் முடியுமென்று
தெரியவில்லை…
என்று சமூக அக்கறையோடு பதிவிட்டிருந்தார் ராஜ்கிரண்.