Spread the love

மாநாடு 06 March 2023

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாகநாதசுவாமி கோயிலில் மட்டுமே தமிழ் கூத்து என்கிற பாரம்பரியமிக்க கூத்துக்கலைக்கு ஆதாரமான கல்வெட்டுச் சான்றுகளும், ராஜேந்திர சோழனின் புடைப்புச் சிற்பமும் இங்குதான் உள்ளது.

பழமையானதும், பாரம்பரியமிக்க பல பெருமைகள் உடையதும், போற்றி பாதுகாக்க வேண்டியதுமான இக்கோயிலின் திருப்பணிகளை தொடங்குவதற்காக இந்து சமய அறநிலையத்துறை 2014 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்து பாலாலையும் செய்யப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்ட நிலையில் சிலரின் தனிப்பட்ட உள்நோக்க காரணத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் ஏதும் நடைபெறாமல் கோயில் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட படியே, புதர்கள் மண்டி கிடக்கின்றன,

இதனை உடனடியாக சரி செய்து திருப்பணிகள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் மாதிரி கும்பாபிஷேகம் செய்யும் போராட்டம் நடைபெறும் என இறை பணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடி சுவாமிகள் கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறார்: 

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், மானம்பாடி, அருள் தரும் சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய,

அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் சோழர்கால தொன்மை வாய்ந்ததும், ராஜேந்திர சோழனின் புடைப்புச் சிற்பம் உடையதும், தமிழ்க்கூத்து என்கின்ற பழமையான கூத்துக் கலைக்கு கல்வெட்டு ஆதாரமாக திகழக்கூடிய ஒரே கோயில் என்கின்ற தனிச்சிறப்பு உடைய
திருக்கோயிலுமாகும்.இது பந்தநல்லூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயிலின்
உப கோயில்களில் ஒன்றாக நிர்வகிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருப்பணி பாலாலயம் செய்து பணிகள் தொடங்கப்பட்டது.சிதிலமடைந்திருந்த பழைய கோயில் தரைமட்டமாக இடித்துப் பிரித்து எடுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கி சில ரகசிய காரணங்களால் தடைபட்டுள்ளது என்பதை அறிகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளாக கோயில் திருப்பணி செய்யப்படாமல் புதர்மண்டி கிடைக்கிறது.ஆனால் இந்த இடர்பாட்டுக்கு காரணமானவர்கள் பதவி உயர்வில் சுகபோகத்தை அனுபவித்து வருகிறார்கள்.

திருப்பணி தொடங்கப்படுவதற்கு முன்பு,
ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் மற்றும் சென்னை உழவாரப்பணி அடியார்கள் மூலமாக இத்திருக்கோயிலில்
சில முறை உழவாரப்பணிகள் (சிவாலயத்தை தூய்மை செய்யும் பணி) நடைபெற்றுள்ளது.
2012 ல் தஞ்சாவூர்- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இக்கோயிலின் ஒரு பகுதி
இடுபடும் அபாயம் வந்தபோது, திருவருள் துணையோடு,
கிராம மக்கள் மற்றும்
பல்வேறு அன்பர்கள் ஒருங்கிணைத்து தடுத்து நிறுத்தினோம்.

அதுமுதல் பக்தர்களிடையே பிரபலம் அடைந்த இத்திருக்கோயிலில் இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாதது சிவனடியார்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பலமுறை நிர்வாகத்தை அணுகி உள்ளோம். கோரிக்கை சுவரொட்டிகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகவும் தகவல் பெற்றுள்ளோம். அதன்படி,
இத்திருக்கோயில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால்
நிர்வாக ரீதியாக சிக்கல் எழுந்துள்ளது.

சரியான புரிதல் இல்லாததாலும் தொடர்ந்து இக்கோயில் புறக்கணிக்கப்படுவதாலும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆகிய இருபெரும் துறைகள் இருந்தும் பத்து ஆண்டுகளாக இந்த முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயிலின் திருப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.

எனவே, இக்கோயிலில் தரமான முறையில் திருப்பணிகளை நிறைவு செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்தவில்லை எனில்,
“யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!” என்னும் திருநாவுக்கரசு நாயனாரின் திருவாக்கினை சிரம்மேல் கொண்டு ,ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் பக்தர்களை ஒருங்கிணைத்து திருக்கோயிலின் முன்பு
மிகப்பெரிய அளவில்
“மாதிரி கும்பாபிஷேகம்” செய்யும் போராட்டம் நடத்தப்படும். என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

67100cookie-check10 ஆண்டுகளாக கிடப்பில் போடுவதா? மாதிரி கும்பாபிஷேகம் நடத்தப்படும் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!