மாநாடு 6 April 2022
காலங்காலமாக பொருளாதாரத்தில் மேல் இருப்பவர்களை மதிப்பதும் பொருளாதாரம் இல்லாதவர்களை தராதரம் இல்லாமல் நடத்துவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சொத்து வாங்குவதற்காக தினந்தோறும் எங்கும் செல்வதில்லை.
ஆனால் சோத்துக்கு வாங்குவதற்காக பணம் படைத்தவர்கள் லூலூ போன்ற குலு குலு சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவார்கள். ஆனால் மந்திரிகள் முதல் மாமன்ற உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் சம்பளம் வழங்க காரணமாக இருக்கும் ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு வருகிறார்கள்.வெளியில் பொருட்கள் வாங்கினால் எப்போதாவது தரம் குறைவாக இருப்பதும் அதற்கு வாடிக்கையாளர்கள் கடைக்காரரை முறையிடுவதும் அந்தக் குறைகள் சரி செய்யப்படுவதும் நாம் அறிகிற ஒன்றுதான்.
ஆனால் ரேஷன் கடையிலோ எப்போதாவது தான் பொருட்கள் தரமாக தரப்படுகிறது. ரேஷன் கடைகளில் தரப்படும் பொருட்களில் சிலவற்றுக்கு விலையில்லா பொருட்கள் என்று பெயர் வைத்திருந்தாலும் கூட டெண்டர் முறையில் அந்த பொருட்களுக்கு வெளியே கிடைக்கும் விலையை விட அதிகமான விலைக்கு தான் வாங்க படுவதாக சிலர் கூறுகிறார்கள்.
அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமானதாக வாங்கி சரியான நேரத்தில் சேர வேண்டியவர்களுக்கு சேர்க்க வேண்டியது அரசின் கடமை அதற்கு தான் அந்தத்துறையில் அதிகாரிகள்.அவர்களை கண்காணிக்க அமைச்சர்கள் ,என்று படிப்படியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.ஆனால் தனியார் கடைக்காரர்கள் நடத்தும் கடைகளில் தரமான பொருட்கள் கிடைக்கிறது.
ஒரு அரசு நடத்தும் ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் கிடைப்பதில்லை இதுபோன்ற நேரத்தில் தான் பொதுமக்களுக்கு தரமானவர்கள் நடத்தும் கடைகளில் பொருட்கள் தரமாக கிடைக்கிறது தமிழக அரசு நடத்தும் ரேஷன் கடைகளில் தரம் இல்லாததற்கு நடத்துபவர்கள் தான் காரணம் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
அவ்வப்போது அந்த கடைகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அந்தப் பகுதி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சென்று பொருட்களின் தரம் ஆய்வு செய்து சரி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி சரி செய்ய வழி செய்யலாம். அப்படி சென்று ஆய்வு செய்து முறையிட்டால் இப்படியான முறைகேட்டை தடுக்க முடியும்.அப்படி யாரும் செய்வதாக தெரியவில்லை.
சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் திடீரென்று சில ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ததில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வண்டிக்காரத் தெரு பகுதி ரேஷன் கடையில் இருந்தவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார்கள். அதற்காக ஆட்சியரே அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வுகள் மேற்கொள்ள முடியாது .
எனவேதான் அந்தந்த துறைகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.அவர்கள் ஆய்வு செய்து சரியான பொருட்களை மட்டுமே மக்களுக்கு கொடுக்க வேண்டும் .
இரண்டு நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூர் கருந்தட்டங்குடி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் பருப்பு வாங்கியதில் கெட்டுப்போன பருப்பை கொடுத்திருக்கிறார்கள் அதை தவிர்க்க முடியாமல் அந்த முதியவர் வாங்கிவந்து நம்மிடம் காட்டினார்.
இதை ஏன் ஐயா வாங்கினீர்கள் அங்கேயே திருப்பிக் கொடுத்து இருக்கலாம் அல்லவா என்று நான் கேட்டதற்கு சாதாரணமாகவே இப்போதெல்லாம் ஒரு குடும்ப அட்டைக்கு 30 கிலோ என்றிருந்தால் அதில் 15 கிலோ தான் இப்போது தரமுடியும் என்று அலைய விடுகிறார்கள் இதில் நான் வேறு இது சரியில்லை அது சரியில்லை என்று முறையிட்டால் கடைக்காரர்கள் அடுத்த மாதம் பொருட்கள் தருவதில் ஏதாவது காரணம் சொல்வார்களே நான் என்ன செய்ய முடியும் என்று நினைத்து இதை வாங்கி வந்துவிட்டேன் என்று நம்மிடம் காட்டியபோது நம் நினைவுக்கு வந்தது
இது தான் யானையின் பலம் அதற்கு தெரியாமல் அங்குசத்தை வைத்திருக்கும் பாகனை பார்த்து அடங்கிப் போகிறது அது போல தான் பல மனிதர்களும் என என்ன தோன்றுகிறது.
விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு விலையில்லா பொருட்கள் என்று பெயர் வைத்தாலும் கூட விலை மதிப்பற்றவர்கள் மக்கள் என்று உணர்ந்து தரமான பொருட்களை வழங்கினால் மட்டுமே தராதரமானவர்கள் நமக்கு அதிகாரிகளாக,ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வரும். இனியாவது உணர்ந்து இதையெல்லாம் சரி செய்வார்களா சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.