மாநாடு 15 July 2022
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் அடுத்த கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த ஸ்ரீமதி என்கிற மாணவி மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.பெற்றோர்களும் பொதுமக்களும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.
இதைப் பற்றி மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் கூறியிருப்பதாவது : சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவியின் தாயார் கூறியிருக்கிறார் அதில் எங்கள் மகள் ஸ்ரீமதி 12ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு மாடியில் இருந்து குதித்து இறந்து விட்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் கூறுகிறார்கள், ஆனால் எனக்கு 13-ஆம் தேதி காலை 6:30 மணிக்கு தான் பள்ளி நிர்வாகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது, ஒரு பெண் கீழே விழுந்தால் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுப்பார்கள் ,பெற்றோர்களுக்கு சொல்லி அனுப்புவார்கள், காவலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள் ,ஆனால் இது எது ஒன்றையும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி செய்யவில்லை ஏன் என்ற கேள்வியை முன்வைக்கிறார்,
மேலும் விடுதியில் இருந்த மாணவிகளை நாங்கள் விசாரிக்க வேண்டும் என்று கேட்டோம், ஆனால் அவர்கள் அனைவரையும் விடுப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது பள்ளி நிர்வாகம், என் பெண்ணின் உடமைகளையும், பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையையும் சோதிக்கும் போது நாங்களும் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம் ஆனால் எங்களை காவலர்களை வைத்து தடுத்து விட்டு அவர்களே காவலர்களோடு சென்று ஆய்வு செய்ததில் எங்கள் பெண்ணின் பையில் இருந்து கிடைக்கப்பெற்றதாக ஒரு துண்டு காகிதத்தை காட்டி அதில் வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்னால் ஆசிரியர்கள் தன்னைத் திட்டியதால் இந்த முடிவை எடுக்கிறேன் என்று எழுதி இருப்பதாக கூறுகிறார்கள் .இதன் மூலம் எங்கள் பெண்ணின் மரணத்தை தற்கொலை என்று திசை திருப்ப பார்க்கிறார்கள் என்கிறார் கண்ணீர் மல்க ஸ்ரீமதியின் தாயார்.
ஸ்ரீமதி என்கிற மாணவியின் மர்ம மரணத்திற்கு நியாயம் கிடைக்க உண்மை வெளிவர தமிழக அரசு நீதி விசாரணை மேற்கொள்ள உத்திரவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் இதே போன்று நிறைய மாணவிகள் அப்பள்ளியில் இறந்து போயிருப்பதாக அப்பகுதி மக்களால் கூறப்படும் செய்திகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. மாணவர்களின் எதிர்கால நலவாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய கல்விக்கூடங்களே, அவர்களது உயிரைக் காவு வாங்குவது எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும். மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை செய்து, பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஜஸ்டிஸ் ஃபார் ஸ்ரீமதி என்ற ஹேஷ்டேக் பகிரப்பட்டு வருகிறது.
சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் கூறியதாவது: எங்கள் பள்ளியில் இதுவரை ஏறக்குறைய பலர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள் என்கிறார் மேலும் இவர்கள் இந்தப் பள்ளியில் படித்த போது 2005 ஆம் ஆண்டு வாக்கில் கூட சக மாணவனை இன்னொரு மாணவன் கொலை செய்ததாகவும் கூறுகிறார்.
தமிழக அரசு நீதி விசாரணை செய்தால் மட்டுமே முழு விவரம் வெளி உலகுக்கு தெரியவரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.