மாநாடு 19 August 2022
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், 2018 ஆம் ஆண்டு பொதுமக்கள் தன்னெழுச்சியாக தங்களுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்து வீதியில் இறங்கி தொடர் போராட்டமாக நடத்தி வந்தார்கள். இந்தப் போராட்டம் ஒவ்வொரு நாளும் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை அரசுக்கு காட்டும் விதமாக நடைபெற்று வந்தது.
2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைதி பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதி பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தவுடன் பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி காவல் துறையினரால் துப்பாக்கிச் சூடு நாளாபுரத்தில் இருந்தும் நடத்தப்பட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாத பொதுமக்கள் சிதறி அடித்து ஓடினார்கள் அவர்களை கூட விடாமல் அங்கு இருந்த பூங்காவில் மறைந்திருந்த காவலர்கள் அவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாலாம் தேதி நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது அந்த குழு நாலு ஆண்டுகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் குழு தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளது அதில் தான் மேற்கூறிய தகவல்கள் தெரிய வந்துள்ளது .
நீதிபதி அருணா ஜெகதீசன் குழு ஐ.ஜி.சைலேஷ் குமார் யாதவ், உட்பட 18 காவல் அதிகாரிகளே இந்தத் துப்பாக்கி சூட்டிற்கு முழு பொறுப்பென்றும் என்றும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.