மாநாடு 3 May 2022
தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடையால் நாள்தோறும் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பது செய்திகளின் வாயிலாக அறியமுடிகிறது.
அதுமட்டுமல்லாமல் பல பெண்கள் தாலியை அறுக்க இந்த மது பழக்கம் காரணமாக இருக்கின்றது இதை தடுத்து நிறுத்த தற்போது திமுகவில் கூட்டணியில் இருக்கும் மதிமுகவின் தலைவர் வைகோ அவர்கள் தனது தாயை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி டாஸ்மாக் கடைகளை அரசே நடத்துவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறுக்க முடியாதது.
காதலித்து கல்யாணம் செய்து கொண்ட இளம் பெண்ணின் தாலியை பறித்து இருக்கிறது இந்த குடிப்பழக்கம் விருதுநகர் அருகிலுள்ள கோட்டநத்தம் பகுதியில் வசித்து வந்தவர் சரவணமுருகன் 36 இவரது மனைவி ராஜலட்சுமி 26
இவர்கள் இருவரும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த போது காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சரவணமுருகன் வீட்டிற்கு வருவதை தவிர்த்துள்ளார்.இதனால் ராஜலட்சுமி அவரை கண்டித்திருக்கிறார்.சம்பவ தினத்தன்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ராஜலட்சுமியின் உறவினர் ஒருவர் சரவணமுருகன் ஆர்.ஆர்.நகரில் உள்ள ஒரு கடையின் முன்பு படுத்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் ராஜலட்சுமி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் எவ்வித அசைவுமின்றி கிடந்ததைக் கண்டு பயந்துபோன ராஜலட்சுமி 108க்கு பேசி ஆம்புலன்சை வரவழைத்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஆம்புலன்ஸ் ஊழியர் சரவண முருகனை பரிசோதித்தபோது அவர் முன்பே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.இதனையடுத்து சரவணமுருகனின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மனைவி இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சத்தமில்லாமல் சந்தையில் விற்கப்படும் டாஸ்மார்க் இன்னும் எத்தனை உயிர்களை பறிக்க போகிறதோ.
