மாநாடு 13 April 2022
தஞ்சாவூர் நகரப்பகுதியில் இன்று அனைத்து இடங்களுமே மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது காரணம் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் இன்று, அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடித்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் 3 திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் நகரை இணைக்கும் முக்கிய பாகங்களான இர்வின் ஆற்றுப் பாலம் அகலப்படுத்தி புதிதாக கட்டுவதற்காக துண்டிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் போக்குவரத்துகள் திருப்பி விடப்பட்டு இருந்தது, அதன்படி சுற்றுலா மாளிகை வழியாக பயணிகள் செல்லும்படி இருந்தது. மக்களின் துயரை குறைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும்படி ஆற்றின் குறுக்கே வழி அமைத்துத் தந்தது.இந்த வழி இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
பலமுறை அந்தப் பாதையில் மகிழுந்து போன்ற சிறிய நான்கு சக்கர வாகனங்களை சில அறிவிலிகள் இயக்கி ஓட்டி வருவதால் விபத்து ஏற்படும் சூழல் இருந்தது. இதையும் கவனித்த அதிகாரிகள் அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு மட்டும் இடத்தை விட்டுவிட்டு ஒரு கல் தடுப்பு ஏற்படுத்தி இருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் அங்கு காவலரை போட்டும் போக்குவரத்தை சரி செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இன்று 3மணி வாக்கில் இரு சக்கர வாகனம் பயணிக்க வேண்டிய பாதையில் ஆத்துக்கு அந்தபுரம் இருந்து டாட்டா இன்டிகா காரை ஒருவர் எடுத்து வந்ததன் விளைவாக போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது
அதன் விளைவாக எந்த சாலையிலும் செல்வதற்கு வழி இல்லாமல் பெண்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு இருந்த பெரியவர்கள் என பலரும் ஏறக்குறைய அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அல்லல் பட வேண்டியதாயிற்று.
தஞ்சாவூரில் அனைத்து பகுதியிலும் காவலர்கள் தேவைப்படுவதால் கூட இன்று இங்கு காவலர்கள் நிருத்தப்படாமல் இருந்திருக்கலாம். அதற்காக சில அறிவிலிகள் இதுபோல நடந்து அனைவருக்கும் துன்பம் கொடுக்கலாமா?
ஐந்தறிவு உள்ள கால்நடைகளை மேய்ப்பதற்கு தான் ஆட்கள் தேவை. ஆனால் ஆறறிவு உள்ளதாக சொல்லப்படும் சில மனிதர்களை மேய்க்கவும் கூடவா அதிகாரிகள் தேவை?
இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் இந்த பாதையை கண்காணித்து பொதுமக்களுக்கு காரணமின்றி இடையூறு தரும் விதமாக இவ்வாறு செயல்படும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து அதிக தண்டத் தொகை வசூலித்து, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலோனோரின் வேண்டுகோளாகும்.