மாநாடு 22 June 2022
தமிழ்நாட்டில் சமீபகாலமாக சட்ட ஒழுங்கு சரி இல்லை என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கூறிவருகிறார்கள் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கூட 20 நாளில் 18 கொலைகள் நடந்ததாக கூறப்பட்டது.
குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சிறார்களாகவே இருக்கிறார்கள் என்பது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரையும் கவலை கொள்ள வைக்கிறது.
இந்நிலையில் தஞ்சாவூரில் கரந்தட்டாங்குடியில் கடந்த ஒரு மாதத்தில் ஆடிட்டர் ஒருவர், கடை வைத்து நடத்தி கொண்டிருந்த கடை உரிமையாளர் ஒருவர் என இரண்டு படுகொலைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அந்த பகுதிகளில் காவலர்கள் வளம் வந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
தஞ்சை புறவழி சாலைகளில் அதிகமாக வழிப்பறி நடைபெறுவதாகவும் , வழிப்பறி திருட்டில் ஈடுபடுபவர்கள் செல்போன், நகைகள், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வாகனத்தில் வருபவர்களை அடித்து விரட்டுவதாகவும், சில நேரங்களில் இருசக்கர வாகனத்தில் தங்களது வீட்டு பெண்களை அழைத்து வருபவர்களின் பெண்களிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்தது.
பல நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்ல தங்கினார்கள் சிலர் இதை வெளியில் சொல்வதால் தங்கள் வீட்டு பெண்களின் பெயர்கள் வெளியில் வந்து விடும் என்பதற்காக பணமும், பொருளும் போனாலும் பரவாயில்லை என்று காவல்துறையினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் தெரியவருகின்றது. சிலர் திருவையாறு செல்லும் வழியில் அம்மன்பேட்டை பாலம் அருகில் செல்போன்கள் திருட்டு போனதை காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு ஏறக்குறைய 10.20 மணி அளவில் அம்மன்பேட்டை ஊரைச் சேர்ந்த பெயிண்டிங் தொழில் செய்யும் சரவணன் என்பவர் வெளியூரில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற வழியில் பள்ளி அக்ரஹாரம் எம்.ஆர்.எம்.மில் அருகில் சிறுநீர் கழிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி இருக்கிறார். அப்போது 15 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் அவரின் வாகனத்தில் முன்புறம் ஒருவனும் பின்புறம் ஒருவனும் வாகனத்தை மறித்து நின்றுகொண்டு உங்கள் ஊர் எது என்று கேட்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட நபர் அம்மன்பேட்டை என்று கூறியிருக்கிறார், அதோடு விடாமல் சிறுவர்கள் அம்மன் பேட்டையில் எந்த தெரு என்று கேட்டிருக்கிறார்கள், சரவணன் இதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் என்று சொன்னவுடன் சிறுவர்களில் ஒருவன் அவர் முகத்தில் ஓங்கி குத்தி இருக்கிறான், அதே நேரத்தில் இன்னொருவன் சரவணனின் பின்புறம் தலையில் ஓங்கி அடித்து இருக்கிறான் இதனால் சிறுது நேரம் சரவணன் நிலைகுலைந்து இருக்கிறார்,
அந்த சமயத்தில் அவர் சட்டைப் பையில் வைத்திருந்த பர்ஸ் ,பணம், ஏடிஎம் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு அச்சிறுவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் பைபாஸ் சாலை வழியாக சென்றார்கள் என்றும் தங்களை பின் தொடரக் கூடாது மீறினால் குத்துப்பட்டு சாக நேரிடும் என்றும் கூறியதாக பெயிண்டர் சரவணன் நம்மிடம் தெரிவித்தார்.அந்த இரண்டு சிறுவர்களில் ஒருவன் ஃபுல் பேண்ட் லோயர் போட்டு இருந்ததாகவும், மற்றொருவன் அரைக்கால் லோயர் போட்டு இருந்ததாகவும் கூறுகிறார்.
பொதுவாகவே முன்பெல்லாம் இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளுக்கும் காவல்துறை வாகனங்கள் வலம்வந்து சந்தேகப்படும்படி நிற்கும் நபர்களை விசாரித்து தவறானவர்கள் என்று தெரிந்தால் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். ஆனால் இப்போது அந்த அளவிற்கு காவலர்கள் ரோந்து வருவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள், மேலும் சாலை ஓரங்களில் பகல் நேரம் இரவு நேரம் என்று இல்லாமல் எந்நேரமும் குடிகாரர்கள் மதுவை வைத்துக்கொண்டு குடிப்பதாகவும், இதனை காவலர்கள் கண்டு கொள்வது இல்லை என்றும் கூறப்படுகிறது, இதனால் இவ்வாறான வழிப்பறி திருட்டு போன்ற தீய செயலில் ஈடுபடுபவர்கள் கூட குடிமகன்கள் போல இருந்து கொண்டும் இந்த வேளையில் ஈடுபட அதிக வாய்ப்பு இருப்பதால் சாலைகளில் மது அருந்தும் குடிகாரர்கள் மீது காவலர்கள் கடுமையான தண்டனை விதித்து அவர்களை தடுத்தால் குடிமகன்கள் என்ற போர்வையில் இருக்கும் வழிப்பறி குற்றவாளிகள் பிடிபட வாய்ப்பிருப்பதாகவும் அதேபோல காவல்துறையினர் பொது மக்களைக் காக்கும் விதமாக தஞ்சாவூர் புறவழி சாலைகளில் பள்ளி அக்ரஹாரம், மாரியம்மன் கோவில் புறவழி சாலை போன்ற இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டும், காவலர்கள் வாகனங்களில் அடிக்கடி ரோந்து வந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
திருட்டை தடுக்குமா? திருடர்களை தட்டி தூக்கமா? தஞ்சை காவல்துறை பொதுமக்கள் எதிர்பார்ப்பு.