மாநாடு 2 July 2022
தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, மண்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி வருகிற ஜூலை 19ஆம் தேதி தஞ்சையில் ஏ ஐ டி யூ சி சார்பாக போராட்டம் நடத்த இன்று நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏஐடி யூசி தஞ்சாவூர் மாவட்ட பொதுக் குழு கூட்டம் தஞ்சாவூர் ஏஐடியூசி கூட்ட அரங்கில் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் வெ. சேவையா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயலாளர் சி. சந்திரகுமார் மாநில முடிவுகள் குறித்து உரையாற்றினார்.

தஞ்சை மாவட்டத்தில் மணல் குவாரிகளில் விதிமுறைகளுக்கு புறம்பாக, பர்மிட் முறையில் முறைகேடு செய்து மணல் கொள்ளை கடுமையாக நடைபெறுகிறது. அரசுக்கு செலுத்துகின்ற தொகையை விட பல மடங்கு அதிகமாக மணல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு லாரிக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் இடை கொள்ளை அடிக்கப்படுகிறது. தஞ்சாவூரில் இருந்து லாரிகளில் பெரிய அளவிற்கு மணல் எடுத்துச் செல்வதால் மண் வளம் முழுதுமாக பாதிக்கப்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே மணல் கொள்ளையை தடுத்திடவும், குவாரிகளை முறையாக செயல்படுத்தவும் கண்காணிப்பு குழு அமைப்பதுடன், அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிக அளவு மணல் எடுப்பதை தடுத்து, கட்டுப்படுத்தி மண்வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கை வலியுறுத்தி ஜூலை 19ஆம் தேதி தஞ்சை ரயிலடி முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, மாரியம்மன் கோயில் அருகில் உள்ள சமுத்திர ஏரி சுற்றுலா தளமாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்துவதற்கு பதிலாக , மண் கொண்டு ஏரி தூர்க்கப்பட்டு குட்டை போல் காட்சியளிக்கிறது. ஆங்காங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. எனவே ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்திடும் வகையில் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வலியுறுத்தியும்,
சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்களுக்கும் கண்மூடித்தனமாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. உடனடியாக ஒன்றிய அரசு நடைமுறைக்கு பொருத்தமற்ற சாதாரண மக்களை பாதிக்கின்ற வரி விதிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யு.சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
