மாநாடு 13 January 2023
தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிததன்மையற்ற செயல் என்று போதித்ததை படித்து மண்டையில் பதித்து வாழ்வியல் முறையில் முறையாக வாழ்பவர்களுக்கு புதுக்கோட்டை அருகே குடி தண்ணீரில் மனித மலத்தை கலந்தார்கள் என்ற செய்தியை கேட்டவுடன் நாமெல்லாம் ஒரு நாகரிக சமூகத்தில் தான் வாழ்கின்றோமா என்கின்ற ஐயப்பாடு இயல்பாகவே எழுந்தது.
இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினரும் பல்வேறு கட்சியினரும் இக்கொடுஞ்செயலை செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அறிக்கைகள் மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தாலும் கூட இதுவரையிலும் உண்மை குற்றவாளிகள் இவர்தான் என்று அடையாளப்படுத்தி கைது செய்யவில்லை என்று தெரிய வருகிறது அதனையொட்டி, உண்மை குற்றவாளிகளை மறைக்க முயற்சிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தொட்டியில் சாதிய வெறிபிடித்த ஆதிக்க சக்திகள் பலநாட்களாக மனித மலம் கழித்து வந்துள்ளனர். அந்த குடி நீரை பயன்படுத்தியதால் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர்.
தற்போது தமிழ் நாட்டில் மிகப்பெரிய தீண்டாமை கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் காவல் துறை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. நடந்துள்ள குற்றத்தை விசாரிக்க தனிப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை குழு உரியமுறையில் விசாரிக்காமல் சம்பவத்தை திசைதிருப்ப முயற்சி செய்வதாக தகவல் வருவது கண்டனத்திற்குரியது. உடனடியாக குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டும், தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் முன்பு இன்று மாலை 6 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர்சு.பழனிராஜன் தலைமை வகித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாவரம் சி. முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.குருசாமி,. மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி பி எம் எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட நிர்வாகி ஆலம்கான், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் சாம்பான், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தின் நிர்வாகி செல்வன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, சிஐடியு மாவட்ட துண செயலாளர் கே.அன்பு,மற்றும் இடதுசாரி இயக்க நிர்வாகிகள் ராவணன், ஆர்.பிரபாகர், கோ.சக்திவேல் தேவா, அருள், சுப்பிரமணியன், ராஜேந்திரன் காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு மாநகர செயலாளர் அருண் சுபாஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்