மாநாடு 8 April 2022
தஞ்சாவூர் நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய ஆற்றுப்பாலங்கள் இரண்டு அதில் ஒன்று தஞ்சாவூர் நகரப் பகுதியில் பழைய நீதிமன்ற சாலைக்கு அருகில் இருந்த இர்வின் ஆற்றுப் பாலம், மற்றொன்று கரந்தட்டாங்குடி பகுதியில் இருந்த வடவாறு பாலம்,
இவ்விரண்டு பாலங்களையும் இடித்து அகலப்படுத்தி புதியதாக பாலங்கள் பணி தொடங்க உள்ளதால் இந்த பாலங்கள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மார்ச் மாதம் 6ஆம் தேதியன்று செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார்.அதன்படி மார்ச் மாதம் 9ஆம் தேதி முதலில் இர்வின் ஆற்றுப்பாலம் இடிக்கப்பட்டது. போக்குவரத்துகள் மாற்றியமைக்கப்பட்டது.
அதன்பிறகு கரந்தட்டாங்குடி வடவாறு பாலம் இடிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது அதன்பிறகு பழைய திருவையாறு சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இந்த சாலைகள் அப்போது சில இடங்களில் சிறு குண்டும் குழியுமாக இருந்தது இப்படியே இருந்தால் இந்த பாதையில் இன்னும் மூன்று மாதங்கள் தாங்காது, இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக அமைந்துவிடும் என்று சுட்டிக்காட்டும் விதமாக மார்ச் மாதம் 17ஆம் தேதி நமது மாநாடு இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்பிறகும் அந்த இடங்கள் சரிசெய்ய படாமலே இருந்தது .
அதன் காரணமாக அந்த சாலையில் ஒரு பகுதியில் சாலையை துண்டித்து விடும் அளவிற்கு குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது.
இதனால் அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் ,உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், சென்றுவர மிகவும் கடினமாக இருந்தது .இதனை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம் அவர்கள் சரி செய்து விடுவதாக உறுதியளித்ததை ஏப்ரல் 2ஆம் தேதி நமது மாநாடு இதழ் செய்தியாக வெளியிட்டிருந்தது.
அதன்படி இன்று
அந்த சாலையில் குளம் போல் நீர் தேங்கி இருந்த இடம் சரி செய்யப்பட்டு இருப்பது நமக்கு தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டோம்.
அந்த இடம் சரி செய்யப்பட்டிருப்பது மிகவும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது நாம் சென்றிருந்தபோது அந்த பகுதியை கடந்து ஆம்புலன்ஸ் ஒன்று எவ்வித சிரமமும் இன்றி வந்ததை கண்டோம் இதற்காக தான் அந்த செய்தியையும் செய்தோம் .
ஊடகங்களின் அறம் என்பது செய்திகளை சுட்டிக் காட்டுவதும் , தட்டிக் கேட்பதும், அந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டவுடன் அதற்கு காரணமானவர்களை தட்டிக் கொடுப்பதும் தான் இந்த நோக்கில்தான் நமது மாநாடு இதழ் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இந்த பிரச்சனையை சரி செய்த அந்த மண்டலத்தின் பொறியாளர் அறச்செல்வி அவர்களையும், ரூபன் அவர்களையும் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தையும் மனதார வாழ்த்தி பாராட்டுகிறது மாநாடு இதழ்.
விரைவில் அந்த சாலையில் உள்ள சிறுசிறு மேடு பள்ளங்களும் சரி செய்யப்படும் என்று நம்புகிறோம்.
நாம் வெளியிட்டிருந்த செய்தியையும் இதில் இணைக்கிறோம்.
செய்தி-1
https://maanaadu.in/thanjavur-5/
செய்தி-2
https://maanaadu.in/thanjavur-8/
செய்தி:க.இராம்குமார்