மாநாடு 25 ஏப்ரல் 2023
கடந்த 22-4-.2023 அன்று திருச்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அனைத்து முக்கிய தலைவர்களும் உறுப்பினர்களும் வந்து சங்கமித்திருந்தார்கள். நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
மாநில செயற்குழு கூட்டத்திற்கு முக்கியமானவர்கள் வந்திருந்து தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்தார்கள் அதன்பிறகு நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் கீழ்க்கண்டவாறு:
திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் அருண் ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் ந. வேழவேந்தன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் தோழர் கா. முருகக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இணைப்பு, தோழமை, சகோதர சங்கங்கள் மற்றும் துறைகளின் நிர்வாகிகள் /உறுப்பினர்கள் கருத்துக்களை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மேனாள் மாநிலத்தலைவர் தோழர் கு.பால்பாண்டியன், தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த தோழர் தரும. கருணாநிதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இணைப்பு சங்கத் தோழர் சு. அறிவழகன் நன்றியுரை ஆற்றினார். அனைவரின் கருத்துக்களையும் கலந்தாய்வு செய்து கீழ்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1) அரசுப்பணியாளர்கள் பணி ஓய்விற்குப்பின் அவர்களுக்கு
சிறந்த வாழ்வாதாரமாக இருப்பது ஓய்வூதியமாகும். நூற்றாண்டு காலம் நடைமுறையில் இருந்த அந்த ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து விட்டு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் திணிக்கப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக இல்லாததால் பணியாளர்களும் சங்கங்களும் அதை தொடங்கிய காலம் முதல் எதிர்த்து வருகின்றார்கள். தற்போது மேற்கு வங்கம் இராஜஸ்தான், ஜார்க்கண்ட் பஞ்சாப், சத்தீஸ்கர், இமாசலப் பிரதேசம், உள்ளிட்ட பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முனைந்திருக்கின்றன. அதே போல தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதமின்றி மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் : 2) பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என ஊதிய சீரமைப்பு செய்து வரும் நிலையில், அரசுப்பணியாளர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை என செய்யப்பட்ட எட்டாவது ஊதியக்குழுவின் ஊதியமாற்றத்தில் 21 மாத கால ஊதியத்தை வழங்காமல் இருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் : 3) நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இயலாத நிலையில், விலைவாசி உயர்விற்கு ஏற்ப அரசு பணியாளர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை மத்திய அரசு வழங்கும் போதெல்லாம் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வரும் நடைமுறையிலிருந்து விலகி அங்ஙனம் வழங்காமல் இருப்பதையும், தவணை தவறி வழங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், தற்போது 01.07.2022 முதல் வழங்க வேண்டிய 4% அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சலுகையை மீளவும் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் : 4) ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரூபாய் 3000/என நிலை கொண்டிருக்கும் நிலையிலிருந்து மீண்டு மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக ரூ 7000/ஆக வழங்கி வரும் நிலையில்
ஊதிய உச்சவரம்பின்றி ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக தமிழக அரசு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் : 5) அரசுப்பணி மற்றும் பணியாளர்களின் சிறப்பை சீர்குலைத்து , நிரந்தர பணியிடங்களில் வெளியாதாரம் மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை நியமனம் செய்ய வகை செய்யும் அரசாணை எண் 115,139 மற்றும் 152 ஆகியவற்றை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் : 6) தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள 35%.காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் TNPSC ன் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதென
தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 7) அரசுப்பணியாளர்களுக்கு அரசாணைகளின் படி பதவி உயர்வுகள், பணியிட மாறுதல்கள், பணி மூப்பு வரிசை சீரமைப்புகள் ஆகியன மிகச்சரியாக வழங்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கல்வி மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தற்போது நடைமுறையில் இருப்பதைப் போல் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் பணியாளர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் உத்தரவுகள் வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்-8) பணியில் சேர்ந்து ஓராண்டு நிறைவடைந்தவுடன் பணி வரன்முறை செய்யப்பட வேண்டிய நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் பணி வரன்முறை செய்யப்படாத பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் பணியாற்றும் விடுதிப்பணியாளர்களை உடனடியாக பணி வரன்முறை செய்யப்பட வேண்டும் என்றும்,மாணவர்களின் எண்ணிக்கை உயர்விற்கேற்ப விடுதிப்பணியாளர்களின் எண்ணிக்கை உயர்த்தி நியமனம் செய்ய வேண்டும் என்றும், மேற்கண்ட விடுதிப்பணியாளர்களுக்கு கூடுதலாக சமையற்கலை பயிற்சி அளிக்க விரும்பும் பட்சத்தில் அரசு செலவிலேயே பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதிப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 9) இந்தியாவிலேயே மிகச் சிறந்த உயிரியல் பூங்கா என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் சான்றளிக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்காவில் பத்து ஆண்டுகளுக்கு மேலும் பணியாற்றும் சுமார் 300 தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 10) அரசின் மிகச்சிறந்த வருவாய் ஆதாரமாகத் திகழும் டாஸ்மாக் நிறுவனத்தில்
கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும்
பணியாளர்களை மேலும் காலம் தாழ்த்தாமல் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 11) அரசுப்பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் துறைகளை தேர்வு செய்யும் நடைமுறையை போல், பணியாற்றும் ஊர்களையும் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யும் நடைமுறையை நடைமுறைப்படுத்தபட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 12)
தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களை வெகுவாக பாதிக்கும் வேலை நேரம் 8.00 மணியிலிருந்து 12 மணி நேரமாக அதிகரித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 13) தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சுப்பணியாளர்களின் 25 அம்சக்கோரிக்கைகள்
தொடர்பாக 29.04.2023 அன்று சென்னையில் நடைபெறவுள்ள கருப்புச் சட்டை ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது
14) பணியாளர் விரோத, சங்க விரோத மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளை பழி வாங்கும் உள் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து மே மாத மத்தியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.