மாநாடு 28 March 2022
ஒட்டுமொத்தத்தில் தமிழ் ,தமிழ்நாடு, தமிழர்கள், என்றாலே தனிச்சிறப்பு அதிலும் தமிழகத்தில் தஞ்சாவூர் என்றால் பஞ்சம் எங்கிருந்தாலும் தஞ்சம் என்று வந்துவிட்டால் பஞ்சம் போக்கும் எங்கள் ஊர் அதுதான் தஞ்சாவூர் என்கிற அளவிற்கு பலரின் பசியை போக்கி பலருக்கு வாழ்வு தந்த ஊர் தஞ்சாவூர்.இந்த தஞ்சாவூரின் சிறப்பில் மேலும் சிறப்பு சேர்ப்பதாக சென்ற பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து நடைபெற்றுவந்த தஞ்சாவூர் சித்திரை தேரோட்டம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது.
அதை பற்றி குறிப்பிடும் போது மன்னர்கள் இருந்த காலத்தில் தஞ்சாவூரில் உள்ள ராஜ வீதிகளில் தேர் வந்து நின்றாள் காண கண் கோடி வேண்டுமாம்.தேரின் அழகும் அகண்டு விரிந்த ராஜ வீதிகளின் அழகும் சொல்லில் அடக்க முடியாத பேரழகாம். அவ்வாறாக இருந்த வீதிகள் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக குறுகி ராஜ வீதிகள் என்கிற அடையாளத்தை இழந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆகியிருந்தது.
தேரோடும் வீதிகளில் சிறு கார் ஓடினாலே போக்குவரத்து இடையூறு ஆகும் அளவிற்கு அயலாரின் ஆக்கிரமிப்பும் அதிகரித்திருந்தது, அந்த சமயத்தில் தான் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஆணையராக பொறுப்பேற்றார் சரவணகுமார் அவர் வந்ததிலிருந்து பல்வேறு சீர்திருத்தங்களை செய்து கொண்டிருந்தார்.கடைகள் ஆக்கிரமிப்பு, கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு ,நூறு ஆண்டுகளாக சில தனியார்கள ஆக்கிரமித்து வைத்திருந்த அரசுக்கு சொந்தமான நிலங்களை, கடைகளை, மீட்பது போன்ற எண்ணற்ற காரியங்களை எவ்வித சமரசமும் இன்றி எவரின் அச்சுறுத்தலுக்கும் தலை வணங்காது மிகவும் திறம்பட செய்து வருகிறார்.
அவரின் செயல்பாடானது ஆரம்பத்தில் நல்லவர்களால் விமர்சிக்கப்பட்டாலும் கூட பிறகு அவரின் சமரசமற்ற செயல்பாட்டை பாராட்ட வேண்டி தான் உள்ளது.
அதன்படி தேர் ஓடிய ராஜ வீதிகளை மீள் உருவாக்கம் செய்து முன்பு எப்படி இருந்ததோ அதேபோல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ராஜ வீதிகளில் தஞ்சாவூரின் சித்திரை தேரோட்டத்தை தஞ்சாவூர் மக்கள் காண்பதற்காக ராஜ வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு அதை திறம்பட நிறைவேற்றி வருகிறார்.
அதன்படி ராஜ வீதிகளில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது..அரசின் அதிகாரியாக வந்து இருந்தாலும் ஆணையர் சரவணகுமாரின் செயல்கள் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது தஞ்சாவூர் மக்களின் சார்பாக மாநாடு இதழ் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறது.
சித்திரைத் தேரோட்டம் என்பது என்ன? அதன் வரலாறு என்ன? என்பதை சற்று விரிவாகவும் சுருக்கமாகவும் அறிவோம்.தெரிந்துவைத்திருக்க வேண்டியது தஞ்சாவூர் மக்களாகிய நமது கடமை அப்போதுதான் ராஜ வீதிகள் ராஜ வீதிகளாகவே இருப்பதற்காக இப்போது எடுக்கப்பட்டிருக்கும் செயல்பாடுகள் சரி என்பதை உணர முடியும்.
18ம் நூற்றாண்டு கி.பி.1776இல் 20,200 நபர்கள் இழுத்து தஞ்சாவூரில் தேர் உலா வந்தததாக ஆவணமொன்று தெரிவிக்கிறது. சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி.1813இல் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் இழுப்பதற்காக 27,394 நபர்கள் பல தாலுக்காக்களிலிருந்தும் அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருவையாறு (1900), பாபநாசம் (2800), கும்பகோணம் (3494),மாயவரம் (3484), திருவாரூர் (2920), மன்னார்குடி (4200), கீவளூர் (4500), நன்னிலம் (3200) என்ற நிலையில் தேருக்காக 26,494 நபர்களும், வாகனங்களுக்காக திருவையாற்றிலிருந்து 900 நபர்களுமாக மொத்தம் 27,394 நபர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
19ம் நூற்றாண்டு :1801இல் மன்னர் தேர் சக்கரங்களைப் புதுப்பிக்க 500 சக்கரம் வழங்கியுள்ளார். அப்போது பண மதிப்பை இப்படி குறிப்பிடுகிறார்கள். கி.பி.1801 மற்றும் கி.பி.1811இல் குறிக்கப்பட்டுள்ள சரபோஜி மன்னரின் மோடி ஆவணங்களில் அவ்வாண்டுகளில் தேரினை இழுப்பதற்காக 30150 சக்கரங்களைச் செலவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இம்மன்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு 5 பெரிய தேர்களையும், 4 ராஜவீதிகளில் தேர்முட்டிகளையும்அமைத்தார்.
1801இல் தேரில் சக்கரங்களைப் புதுப்பிக்க 500 சக்கரங்கள் (அக்காலத்தின் பண மதிப்பு) செலவிடப்பட்டதாகவும், 1801, 1811ஆம் ஆண்டுகளின் தொடர்புடைய ஆவணங்கள் அந்த ஆண்டுகளில் தேர்த் திருவிழா நடத்துவதற்காக 30,150 சக்கரங்கள் செலவிடப்பட்டதாகவும் ஆவணங்கள் மூலம் அறியப்படுகிறது.
21ம் நூற்றாண்டு :நூறாண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சித்திரை தேரோட்டம் 2015இல் மீண்டும் நடைபெற்றது.தேரோட்டத்தின் முதல் நாளன்று (28.4.2015) கோயில் களை கட்ட ஆரம்பித்தது. முளைப்பாரி ஊர்வலமாக நடராஜர் மண்டபத்திலிருந்து மேள வாத்தியங்களுடன் கிளம்பி ராஜராஜன் வாயில்,கேரளாந்தகன் வாயில் வழியாக கோயில் வெளியே வந்தது. பக்தர்கள் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
29.4.2015 அன்று தேரோட்டத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.தேரோட்ட நாளன்று தேர் காலை 5.15 மணியளவில் பெரிய கோயிலிலிருந்து விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன், தனி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு, சோழன் சிலை, சிவகங்கைப் பூங்கா வழியாக மண்டபம் வந்தடைந்தனர். கிளம்பத் தயாராக இருந்த தேரின் சிம்மாசனத்தில் இறைவனும் இறைவியும் வைக்கப்பட்டனர். காலை 6.15 மணிவாக்கில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் கிளம்பியது. அலங்கரிக்கப்பட்ட யானை அழகாக நடந்து வர விநாயகர்,முருகன் ரதங்கள் முன்னே செல்ல தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய தேர் அசைந்து அசைந்து சென்றது.தேரின் முன்னர் தப்பாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளை கலைஞர்கள் சிறப்பாக நிகழ்த்திக்கொண்டு வந்தனர். ஓதுவார்கள் தேவாரம் ஓத, மேள வாத்தியங்கள் இசைக்க தேர் அழகாக பவனி வந்தது. தேரை நீலோத்தம்மன், சண்டீகேசுவரர் ரதங்கள் பின்தொடர்ந்தன. கீழ்க்கண்ட இடங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக தேர் நிறுத்தப்பட்டது.அவ்விடங்களில் பக்தர்கள் அளித்த தேங்காய்கள் உடைக்கப்பட்டன. தீபாராதனை காட்டப்பட்டது. நூற்றாண்டுகளுக்கு பிறகு 2015இல் தஞ்சாவூரில் சித்திரைத் தேரோட்டம் மேல ராஜவீதி ,வடக்கு ராஜவீதி, கீழ ராஜவீதி,தெற்கு ராஜவீதி இப்படி ராஜ வீதிகளில் வலம் வந்ததாக சொன்னாலும்கூட அது ராஜ வீதிகளாக இல்லை என்பது தான் உண்மை. இன்னும் சில நாட்களில் சித்திரை தேரோட்டம் நடைபெற இருப்பதையொட்டி ராஜ வீதிகளை மீட்டெடுக்கும் பெரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சரவணகுமார் அவர்களின் பணி போற்றுதலுக்குரியது.