மாநாடு 23 January 2023
சாதாரணமாகவே சிற்றுந்துகள் விபத்தை ஏற்படுத்தும் விதமாக, மக்களை அச்சுறுத்தும் விதமாக வேகமாக சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் இயக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அதிலும் தஞ்சாவூரில் இருந்து களக்குடிக்கு செல்லும் பேருந்து நகரப் பகுதிகளுக்குள் ஹாரன் அடித்துக் கொண்டே ஏதோ போக்குவரத்துக்கள் இல்லாத தனி சாலையில் செல்வது போல மிகவும் வேகமாக இன்று மதியம் 12.20 மணி அளவில் சென்று கொண்டிருந்ததை தஞ்சாவூர் இர்வின் ஆற்றுப் பாலம் அருகில் நாம் சென்று கொண்டிருந்த போது காண முடிந்தது, ஹாரனும் ஏர் ஹாரன் பொறுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது ஏனெனில் அளவுக்கு அதிகமான ஒலியை எழுப்பிக் கொண்டு சீறி சென்றது. அதனைக் கண்டு நாம் ஏன் இப்படி எவ்வித பொறுப்புணர்வும், கட்டுப்பாடும் இல்லாமல் மினி பஸ்களை ஓட்டுகிறார்கள் , இவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் , இது போன்றோர்களை ஒழுங்கு படுத்துவதற்கும் அரசாங்கத்தில் தனி அலுவலர்களே இருக்கும்போது போக்குவரத்தை கண்காணிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்கிற கேள்வியை அவர்களிடத்தில் எழுப்ப வேண்டும் அதனை நமது இதழில் வெளியிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.
அப்போதே மேம்பாலம் அருகில் மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையில், அப்பெக்ஸ் மருத்துவமனை எதிரில் மினி பேருந்து பிரேக் பிடிக்காமல் ஒரு வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தி இருக்கிறது என்ற செய்தி கிடைத்தது அதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு புறப்பட்டு சென்று பார்த்தபோது ஒரு மகிழுந்து நின்று கொண்டிருந்தது, அதனைச் சுற்றி 5 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள், அந்த மகிழுந்திலிருந்து ஒரு 10 அடி தொலைவில் VMT என்கிற சிற்றுந்து நின்று கொண்டிருந்ததை காண முடிந்தது, அங்கு நாம் எடுக்க வேண்டிய புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மகிழுந்தின் அருகில் நின்றிருந்தவர்களிடம் என்ன நடந்தது என்று தகவலை கேட்டோம்.
விஎம்டி என்கின்ற மினி பஸ் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் இருந்து மனோஜிபட்டி வரை செல்வதற்காக பயணிகளை ஏற்றுக் கொண்டு புறப்பட்டு வந்திருக்கிறது, மேம்பாலம் வழியாக ஸ்டேடியத்தை கடந்து வந்த போது, எதிர்புறத்தில் இருந்து மகிழுந்து இரண்டு வந்து குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி சாலையில் திரும்பி இருக்கிறது, அதில் முதல் வாகனம் கடந்து விட்டதாம், அதனை தொடர்ந்து வந்த
காரும் அதே சாலையில் திரும்பி இருக்கிறது, அந்த நேரத்தில் வந்த இந்த மினிபஸ் இந்த காரின் மீது மோதிவிட்டு பிரேக் பிடித்ததில் 10அடி தள்ளி நின்றிருக்கிறது என்ற தகவலை அறிய முடிந்தது.
பேருந்து இயக்கிய ஓட்டுனரிடம் காரின் உரிமையாளர் நான் மெதுவாக தானே வந்தேன் நீங்கள் ஏன் பிரேக் பிடிக்காமல் வந்து மோதினீர்கள் என்று கேட்க , அவரோ ஏதேதோ சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருந்தார்,
அந்தப் பேருந்தின் நடத்துனர் யாரோடோ வெகு நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார், யாரோ ஒருவர் பக்கத்தில் தான் இந்த பேருந்தின் அலுவலகம் இருக்கிறது வாருங்கள் அங்கு பேசிக் கொள்ளலாம் என்று சமாளித்துக் கொண்டிருந்தார், யாரோ ஒருவர் உங்க பஸ்ல பிரேக் பிடிச்சா உடனே நிற்குமா என்று கேட்க
பஸ்ஸின் ஓட்டுநர் கொஞ்சம் தள்ளி போய் தாங்க நிற்கும் என்று சொன்னார் இதைக் கேட்டவுடன் நான் அப்படி என்றால் மெதுவாக தானே நீங்கள் வந்திருக்க வேண்டும் என்று கேட்டேன், மெதுவாக தான் சார் வந்தேன் அப்போதும் இடித்து விட்டது என்று அப்பாவியாக கூறினார் அந்த மினி பஸ் ஓட்டுனர்.
பெரிய ஆய்வுகள் ஏதும் செய்யப்பட தேவையில்லாமலே ஏதாவது ஒரு இடத்தில் வந்து இறங்கி ஓரமாக நின்று பார்த்தாலே போதும் இந்த மினி பஸ்கள் ஓடும் விதத்தையும் , ஓட்டும் விதத்தையும் அதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம் ஆனால் இது எதையும் கவனிக்காமல் இருப்பதால் பல விபத்துக்கள் நாள்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை. மினிபஸ்களை ஓட்டும் ஓட்டுநர்களில் பலருக்கும் ஓட்டுனர் உரிமம் கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.
காசை மட்டும் பார்ப்பதற்காக பஸ்களை இயக்கும் உரிமையாளர்களிடமிருந்து மக்களை காப்பதற்காக பஸ்களை பார்வையிட்டு முறையாக சரி செய்வார்களா அதிகாரிகள் பொறுத்திருந்து பார்ப்போம்.