மாநாடு 08 ஏப்ரல் 2023
நாட்டில் சமூகம் தலைசிறந்து வாழ வேண்டும் என்றால் சாதி மத சகதிக்குள் சிக்காமல் இளைய சமூகம் எழுச்சி பெற வேண்டும் என்றால் படிக்கும் பள்ளிக்கூடங்களையும், பல்கலைக்கழகங்களையும் அரசுகள் அதிக அளவில் திறந்து மாணவ மாணவிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தந்து படிக்க வைக்க வேண்டும்.
எதார்த்தத்தில் இப்படி அரசுகள் செயல்படுகிறதா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் ? படிப்பகங்களை நிறைய திறந்து அதில் தன் கட்சியின் தொண்டர்களின் பிள்ளைகளையாவது அதிக அளவில் அரசு நடத்தும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்த்து படிக்க வைத்து அரசு நடத்தும் நிறுவனங்களையும் காத்து கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது தற்போது மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
இந்நிலையில் படிப்பகங்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட டாஸ்மாக் குடிப்பகங்களுக்கு அரசுகள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதையே நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றது. அதுபோல ஒரு அருவருப்பான நிகழ்வு நேற்று திருவாரூரில் நடந்துள்ளது.
திருவாரூர் நீலக்குடி பகுதியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏறக்குறைய 2500 மாணவ மாணவிகள் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றார்கள்.
அவ்வாறு விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகள் அவ்வப்போது ஜெராக்ஸ் எடுப்பதற்காகவும், உணவு உண்பதற்காகவும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் அவ்வப்போது திருவாரூர் நகர் பகுதிக்கு வருவது வழக்கம்.
அதேபோல நேற்று இரவு முதுகலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் சென்னை சேர்ந்த மாணவியும், மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவியும் உணவு சாப்பிட்டுவிட்டு ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு சில தேவைக்காக ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து செல்வதற்காக விடுதியில் இருந்து கங்களாஞ்சேரி பகுதிக்கு வந்திருக்கிறார்கள். உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு இரண்டு மாணவிகளும் அருகில் இருந்த ஏடிஎம்க்கு பணம் எடுப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் அங்கு குடித்துவிட்டு போதையில் நின்று கொண்டிருந்த 4 இளைஞர்கள் மாணவிகளின் உடையை பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் மாணவிகளின் செல்போனை பறித்துக் கொண்டு மாணவிகளை அடித்ததாகவும் அதனால் மிகுந்த பயம் கொண்ட மாணவிகள் உணவகத்திற்குள் ஓடி புகுந்ததாகவும் அப்போதும் மாணவிகளை விடாமல் துரத்தி சென்ற குடிகாரர்கள்
உணவகத்திற்குள் நுழைந்தும் மாணவிகளை தாக்கியதாகவும் தெரிய வருகிறது. இதனை தடுக்க முயன்ற உணவக உரிமையாளரையும் குடி போதையில் இருந்தவர்கள் தாக்கி இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது அதன் அடிப்படையில் காவலர்கள் வண்டாம் பாளை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை மற்றும் வணிகராஜ் என்கிற இருவரையும் கைது செய்து இருக்கிறார்கள். தப்பி ஓடிய மேலும் ரெண்டு பேரையும் பிடிக்கும் பணியில் தீவிரமாக காவலர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
தாக்குதலில் காயம் அடைந்த மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தன் சொந்த ஊரை விட்டு இந்த ஊருக்கு வந்து தங்கி படித்து தங்களது வாழ்வில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று குறிக்கோளோடு படித்த மாணவிகளை,
குடித்துவிட்டு குடும்பத்தின் பெயரை கெடுக்கும் விதத்தில் திரிந்து கொண்டு இருந்த இளைஞர்கள் மாணவிகளிடம் அத்து மீறியது அடித்தடியில் இறங்கியது அநாகரிகத்தின் உச்சம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மேலும் கூறுகையில் குடிப்பகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் படிப்பகங்களுக்கு கொடுப்பதில்லை அரசுகள் என்கிறார்கள் அதாவது குடிக்க விருப்பப்பட்டவர்கள் விரும்பும் இடத்தில் திரும்பும் பகுதியில் எல்லாம் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் இருப்பது போல நினைக்கும் பகுதியிலோ ஊரிலோ மாவட்டத்திலோ படிக்க பல்கலைக்கழகங்கள் இன்றளவும் இல்லாதது மிகப்பெரிய அவலம் தங்களது மாவட்டங்களில் அரசின் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இருந்தால் ஏன் இதுபோல இந்த மாணவிகள் தங்களது உற்றாரை உறவினரை விட்டு ஊரு விட்டு ஊரு வந்து இந்த அவல நிலையில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாக போகிறார்கள் என்கிற நியாயமான கேள்வியை எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
படிப்பு மட்டுமே பண்பை வளர்த்து பொருளாதாரத்தை உயர்த்தும் ! பொருளாதாரம் உயர்ந்தால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். குடிப்பகத்தை குறைத்து படிப்பகத்தை பெருக்க வேண்டும் அரசு செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.