Spread the love

மாநாடு 13 March 2022

மக்களுக்காக பணியாற்ற வருகின்றதாக நாம் நினைக்கும் அதிகாரிகள்,ஆட்சியாளர்கள், ஆளுநர்கள் வரை சிலர் மக்களின் கஷ்டங்களை அவர்கள் படும் இன்னல்களை புரிந்து வைத்திருப்பதாக தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறினார்கள்.

அதைப் பற்றி கேட்ட போது. நேற்று சனிக்கிழமை தஞ்சாவூர் பகுதிக்கு இரண்டு நாள் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளார். அதன் காரணமாக நேற்று காலையில் இருந்து தஞ்சாவூர் பகுதி முழுவதும் பல சாலைகளை மறித்து அன்றாடம் பணிக்கு செல்கின்ற மக்களை வேறு வேறு பாதைகளில் செல்லுமாறு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இது மக்களுக்கு கொடுமையாக இருக்கிறது ஏனென்றால் ஏற்கனவே தஞ்சாவூரில் தெற்கு வீதி,மேலவீதி பகுதிகள் அகலப்படுத்தும் பணிக்காக தோண்டி போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள நகரத்தை இணைக்கும் முக்கிய ஆற்றுப்பாலமான இர்வின் பாலம் இடிக்கப்பட்டு பாலம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது அதன் காரணமாக அங்கு போக்குவரத்துக்கள் மாற்றி ஆத்துபாலம் சுற்றுலா மாளிகை வழியாக அனுப்பப்பட்டு வந்தது, ஆனால் நேற்றிலிருந்து ஆளுநர் இந்த சுற்றுலா மாளிகையில் தங்கியிருக்கும் காரணத்தால் இங்கும் மக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.இதன் காரணமாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு வர வேண்டும் என்றால் மக்கள் பல கிலோமீட்டர்கள் பயணம் செய்து அல்லல்பட்டு தான் வரக்கூடிய சூழல் உள்ளது.

இதை பற்றி நம்மிடம் பேசிய பெரியவர் ஒருவர் முன்பெல்லாம் இதே தமிழகத்தில் பல முதல்வர்களும் இருந்திருக்கிறார்கள் .ஆளுநர்களும் இருந்திருக்கிறார்கள் அப்போதெல்லாம் இது போல மக்களை அல்லல் படுத்தும் போக்கு இல்லை .ஆனால் இப்போது தமிழகத்தில் அதிகமாக இதுபோல் நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது தஞ்சாவூரில் ஆளுநர் தங்குவதற்கு இதை விடவும் வசதியாக, பாதுகாப்பாக பல இடங்களை ஏற்பாடு செய்திருக்கலாம் ஆனால் மக்கள் இப்போது பயன்படுத்தி வரும் முக்கிய பகுதியில் இருக்கும் சுற்றுலா மாளிகையில் தங்க வைத்தது ஏன் என்று தெரியவில்லை என்றார்.

இன்று 13ஆம் தேதி ஆளுநர் கும்பகோணம் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விழாவில் கலந்து கொள்வதாக செய்திகள் தெரிவிக்கிறது .அதன் காரணமாக தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் பல கிராமங்களில் கூட காவலர்கள் கடும் வெயிலில் நிறுத்தப்பட்டு காவல் பணி என்கிற பெயரில் சாலைகளில் மக்களை தடுத்து மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கும் போக்கை நாம் காண முடிந்தது.

இன்று கும்பகோணம் சாலையில் நெடார் என்ற கிராமம் உள்ளது அந்த சாலையை கடந்து தான் கண்டியூர், திருவேதிகுடி போன்ற முக்கிய ஊர்களுக்கு செல்ல முடியும் அதற்கு வந்த மக்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தடுத்து நிறுத்தினார்.

கவர்னர் பாபநாசம் வந்துவிட்டதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் இந்த பகுதியை கடக்க இருப்பதாகவும் அதனால் அனைவரும் சாலையை கடக்க கூடாது என்று பாதுகாப்புக்காக தடுத்து நிறுத்தப்பட்டதாக அந்த பெண் காவலர் கூறினார்.

இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் பாபநாசம் என்கிற ஊர் நெடாரிலிருந்து ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் அங்கு கவர்னர் வந்துவிட்ட காரணத்தைக் கூறி இங்குள்ள மக்களை அடுத்து வெயிலில் நிற்க வைப்பது என்பது எப்படி பட்ட மக்கள் பணி என்பது தெரியவில்லை.

முதல்வருக்காக போக்குவரத்து மாற்றம்

இந்த செய்தியை பார்க்கும் போது இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி ,கன்னியாகுமரி பகுதியில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்ற போது டீக்கடை மாஸ்டர் ஒருவர் முதல்வர் வந்த வாகனத்தின் மீது சில்வர் டம்ளரை தூக்கி அடித்து இருக்கிறார். என்ன நடந்தது என்று விசாரித்தபோது தூத்துக்குடியில் இருந்த திமுக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் சிலையை திறந்து வைத்த ஸ்டாலின் திருநெல்வேலி அருகில் காவல்கிணறு என்ற பகுதிக்கு வந்து கொண்டிருப்பதாக கூறி முதல்வர் வரும் காரணத்திற்காக அங்கு பல மணி நேரம் மக்களை கூட விடாமல் எங்கும் செல்ல முடியாத அளவுக்கு தடுத்து திருப்பி அனுப்பியுள்ளார்கள். அதன் காரணமாக காவல் கிணற்றில் டீக்கடை வைத்து அன்றாடம் பிழைப்பு நடத்தும் டீக்கடை மாஸ்டரான பணகுடி பாஸ்கர் என்பவருக்கு அன்று வியாபாரம் மிகவும் பாதிக்கப் பட்டதாக அதனால் கோபமடைந்தவர் டீ ஆத்தும் குவளையை தூக்கி முதல்வரின் வாகனத்தின் மீது எரிந்ததாக விசாரணையில் தெரியவந்தது .

அவர்மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதில் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது என்கிற பிரிவும் குறிப்பிடத்தக்கது.அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் பாஸ்கரை சூழ்ந்த நிலையில் அவரை பத்திரமாக மீட்டு காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவுபடி டீ மாஸ்டரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். முதல்வர் ஸ்டாலின் போடுகின்ற கூட்டங்களில் பெண் காவலர்களை சாலையோரங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று சொன்னதாக தெரிகிறது.

ஆனால் இன்று கூட பல பகுதிகளில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் கடும் வெயிலில் நிறுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது அனைத்தையும் மக்களின் முதல்வர் நான் என்று சொல்லிக் கொள்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்மாதிரியாக இருந்து இனி இதுபோல நடக்காமல் பார்க்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

24560cookie-checkதஞ்சையில் ஆளுநர் வருகையால் போக்குவரத்து மாற்றமும் மக்கள் படும் பாடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!